நுண்கலைபாட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் புறக்கணிப்பு

Report Print V.T.Sahadevarajah in கல்வி

தமிழர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றோடு பின்னி பிணைந்து உள்ள நுண்கலை பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கணிசமான அளவில் வெற்றிடங்கள் காணப்படுகின்றபோதிலும் கடந்த மாதம் கிழக்கு மாகாண சபை ஊடாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் இவை சரியான முறையில் நிரப்பி கொடுக்கப்படவில்லை என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சு. பாஸ்கரன் தெரிவித்துன்னார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கர்நாடக சங்கீதம், நடனம், நாடகமும், அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் மிக நீண்ட காலமாக தேவைப்பாடு உள்ளது. இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்யக் கூடிய அளவில் நுண்கலை பட்டதாரிகள் போட்டி பரீட்சை, செயன்முறை பரீட்சை ஆகியவற்றில் சித்தி அடைந்து உள்ளனர்.

ஆனால் கண் துடைப்புக்காக பகுதி அளவிலேயே அம்பாறை மாவட்டத்தில் நுண்கலை பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.

கர்நாடக சங்கீதம் கற்பிப்பதற்கு அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் சுமார் 12 வெற்றிடங்கள் நிலவுகின்றபோதிலும் 7 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளின் அதிபர்கள் அவர்களின் பாடசாலைகளில் நிலவி வருகின்ற நுண்கலை பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரை கோரி உள்ளார்கள்.

திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் உள்ள நுண்கலை பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் அம்பாறை மாவட்டத்துடன் ஒப்பிடுகின்ற போது அண்மைய பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் ஓரளவுக்கு நிரப்பி கொடுக்கப்பட்டு உள்ளன.

ஆனால் அம்பாறை மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட வகையில் நுண்கலை பட்டதாரிகள் அநேகர் நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என குறிப்பிடப்படகின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்