யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பரிசளிப்பு விழா

Report Print Thamilin Tholan in கல்வி

யாழ். மாவட்டத்தில் முன்னணி ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழும் யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்றைய தினம்(22) பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் பே. தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற விழாவில் வடமாகாணக் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், சமூக சேவையாளர்களான, மாலதி சுப்பிரமணியம், சுப்பிரமணியம் ராகுலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 49 மாணவ, மாணவிகள் விசேட பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

இந்தப் பாடசாலையில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் வி. நேருகா என்ற மாணவி 188 புள்ளிகள் பெற்று மாவட்ட மட்டத்தில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம்.

அத்துடன் தரம் 01 முதல் தரம் 05 வரை தவணைப் பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவிகளும் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

விழாவின் ஆரம்பத்தில் செவிகளுக்கு இனிமையாக விசேட மேளக் கச்சேரி நிகழ்த்திய ஈழத்தின் பிரபல நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வடமாகாணக் கல்வியமைச்சரால் கெளரவிக்கப்பட்டனர்.

பாடசாலைக்குப் பல்வேறு வகைகளிலும் உதவி புரிந்த சேவையாளர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாணக் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் உள்ளிட்ட விருந்தினர்கள் பாடசாலைச் சமூகத்தால் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, விழாவில் மாணவ, மாணவிகளின் கண் கவர் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

விழாவில் பெருமளவான பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாண்வர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...