வியக்க வைக்கும் கிராமத்து பாடசாலையின் சாதனை

Report Print Suman Suman in கல்வி

ஒழுங்கான மைதானம் கூட இல்லாமல் தேசிய மட்டத்தில் துணுக்காய் வலயப் பாடசாலையான கோட்டைக் கட்டியகுள அ.த.க பாடசாலை எறிபந்துப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றுள்ளது.

துணுக்காயில் இருந்து பதினைந்து கிலோமீற்றர் தூரத்திலும் கிளிநொச்சி அக்கராயனில் இருந்து பத்து கிலோமீற்றரிலும் போக்குவரத்துகள் அற்ற கிராமம் ஒன்றில் அமைந்துள்ளது கோட்டைக் கட்டியகுளம் அ.த.க பாடசாலை.

இந்த மாணவர்களின் சாதனைக் குறித்து பாடசாலைச் சமூகத்தினர் கருத்து வெளியிடுகையில்,

எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை கோட்டைக்கட்டியகுளம் பாடசாலை எறிபந்து அணியினர் வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் புகழைத் தேடித் தந்துள்ளனர்.

முல்லைத்தீவு கோட்டை கட்டியகுளம் அ.த.க.பாடசாலை 1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஆகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராமங்களில் ஒன்றான கோட்டை கட்டியகுளம் கிராமத்தில் அமைந்த பாடசாலை எந்த ஒரு அடிப்படை வசதியும் அற்றநிலையில் உள்ளது.

இந்த பாடசாலையில் சொற்ப அளவில் மாணவர்களை கொண்டு இருந்தாலும் மிகவும் திறமை வாய்ந்த மாணவர்கள் உள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின் எந்த விதமான பெளதீக வள அபிவிருத்தியும் நடைபெறாத பாடசாலையாக இருந்தாலும் கூட மாணவர்களின் முயற்சியாலும் அப்பாடசாலையில் 2011ஆம் ஆண்டு முதலாவது உடற்கல்வி ஆசிரியர் வே.திவாகரன் நியமனம் பெற்ற பின்னர் அப்பாடசாலையின் விளையாட்டுத் துறை படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது.

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் எறிபந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இப் பாடசாலையில் எறிபந்து என்பது ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஒரு இலட்சிய வெறியாகவே இருந்து வந்தது.

2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் மாவட்டத்தில் சாம்பியன் பட்டத்தை பெற்றாலும் மாகாண மட்டத்தில் சாதிப்பது என்பது பெரும் சவாலாகவே இருந்தது.

சவாலையும் மாணவர்களின் உளவியலையும் வெற்றி கொள்ளக்கூடிய ஆசிரிய வளம் இருந்ததும் விடாதபயிற்சியும் தேல்விகளைக் கண்டு துவண்டு போகாத மன வலிமை கொண்ட ஆசிரியரின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டின் விளைவாக இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியிலும் அகில இலங்கை பாடசாலைகள் எறி பந்தாட்டச் சங்கம் நடத்திய தேசிய ரீதியிலான போட்டியிலும் இமாலய சாதனை படைக்க முடிந்தது.

இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் 17 வயது ஆண்கள் 2ஆம் இடமும் தேசிய மட்டத்தில் எறி பந்தாட்ட சங்கம் நடத்திய போட்டியில் 20 வயது ஆண்கள் 2ஆம் இடமும் பெற்று துணுக்காய் கல்வி வலயத்திற்க்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்து பாடசாலைக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

குறித்த பாடசாலையில், ஒரு பாடசாலைக்குரிய அடிப்படை வசதிகள் இல்லை. சிறந்த மைதானம் இல்லை. பாடசாலைக்கான போக்குவரத்துகள் இல்லை.

மாணவர்கள் பாடசாலைக்கு நடந்து வந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்ற நிலைமை எல்லாத் தடைகளையும் மீறி பாடசாலைக்கும் கிராமத்திற்கும் துணுக்காய் கல்வி வலயத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த துணுக்காய் கோட்டை கட்டியகுளம் எறிபந்தாட்ட அணியினரையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியரையும் ஏனைய அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும்.

எல்லாவற்றையும் மீறி தமக்கிருந்த சகல தடைகளையும் மீறி வளமற்ற ஒரு கிராமப் பாடசாலை தேசிய மட்டத்தில் சாதித்திருக்கின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்