மூன்றாவது நாளாக தொடரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

Report Print Sumi in கல்வி

யாழ்.பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று முதல் நிறுத்தியிருந்த நிலையில், இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிர்வாக முடக்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 37ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டுவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக திங்கட்கிழமை முதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினை முடக்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

பல்கலைக்கழக நுழைவாசல்களை முடக்கி நிர்வாகத்தினை இயங்கவிடாது மாணவர்கள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுவரும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் குறித்த மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினை சூழவுள்ள பீடங்களான கலை விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய மூன்று பீடங்களின் கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தமது நிர்வாக முடக்கப்போராட்டத்தினை இன்று மூன்றாவது நாளாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்திற்கு யாரும் நுழைந்து விடாதவகையில் வாசலை அடைத்து மாணவர்கள் தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த அரசில் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றுக்கு மாற்றப்படும் என உறுதியான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டத்தை தொடரப் போவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்