ஆசிரியர்களை மீண்டும் பந்தாடியுள்ளது கல்வியமைச்சு

Report Print V.T.Sahadevarajah in கல்வி

கிழக்கு மாகாண கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களை மீண்டுமொருமுறை கல்வியமைச்சு பந்தாடியுள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வருடமும் இவ்வாறான நிலையொன்று தோன்றியபோது கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கல்வியமைச்சிற்குச் சென்று அங்கு சத்தியாக்கிரகமிருந்து அதனை வெற்றி பெற்றிருந்தார்.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சியை பூர்த்திசெய்து வெளியேறும்போது இப்படியான முறையற்ற ரீதியில் நியமனம் நடைபெறுவது புதியவிடயமல்ல.

இவ்வாறான நியமனத்தின் போது தொழில் பெறும் சந்தோசத்திற்கு அப்பால் அவர்கள் மிகுந்த பீதியுடன் காணப்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் இல்லையென்றால் அவர்களை வேறு மாகாணங்களுக்கு நியமிப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

முன்னதாகவே கிழக்கு மாகாண கல்வித் தரம் நாட்டின் இறுதி அதாவது 9ஆவது நிலையிலுள்ளதை நாமறிவோம். அதற்கு போதியளவு ஆசிரியர்களின்மையும் ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆசிரியர்களை வேறு இடங்களுக்கு நியமித்திருப்பதை நியாயமென்று கூறமுடியுமா?

கல்வியியற் கல்லூரிகளுக்கான நியமனங்களின் போது கிழக்கு மாகாண தமிழ் மொழிமூல டிப்ளோமாதாரிகள் பலரை (ஆண், பெண் இரு பாலாரையும்) கிழக்கு மாகாணத்தில் வெற்றிடம் இருக்கத்தக்கதாக வெளி மாவட்டங்களுக்கு நியமித்தமை தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் விருப்பு வெறுப்புக்களில் நியாயமானவற்றை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவது கல்வி அமைச்சின் தலையாய கடமைப் பொறுப்பாகும்.

அப்போதுதான் இலங்கையின் கல்வித்துறையானது தனது இலக்கை அடைய வழியேற்படும். ஆசிரியர் நியமனங்களின் போது வெற்றிடங்கள் உள்ள தனது மாகாணத்தில் அந்த நியமனங்கள் வழங்கப்படாது வெளி மாகாணங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவது பாரிய பிரச்சினையை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

இதேவேளை சாதாரண சித்தி பெற்ற சிலரை சொந்த மாவட்டத்தில் நியமிக்கப்பட்டிருப்தையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது எந்த அடிப்படையில் சாத்தியமாகும் என்பதையும் அறிய விரும்புகிறது சங்கம்.

மெரிட் சித்திபெற்ற ஆசிரியர்களை சொந்த பிரதேசத்தில் தேசிய பாடசாலையில் நியமிப்பது ஆசிரியர் மத்தியில் ஏற்றத்தாழ்வை தோற்றுவிக்கும். எனினும் இதே மெரிட் சித்திபெற்ற இன்னும் சில ஆசிரியர்களை மிகவும் பின்தங்கிய மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது நியமனத்தில் ஒரு சீரற்றதன்மையைத் தோற்றுவித்திருக்கின்றது.

இது விடயத்தில் நாம் ஒரு பொறுப்பான அமைப்பென்ற வகையில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்களுடன் இது விடயமாக பேசி பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுப்போம்.” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்