இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கிடைத்துள்ள வாய்ப்பு!

Report Print Murali Murali in கல்வி
179Shares
179Shares
ibctamil.com

2018-19 கல்வியாண்டில், இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு, சிறிலங்கா மாணவர்கள் 175 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் புலமைப்பரிசின் திட்டத்தின் கீழ், 175 சிறிலங்கா மாணவர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்களில் பட்ட மற்றும் பட்ட பின்படிப்புகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டத்தின் கீ்ழ், மருத்துவம் தவிர்ந்த, பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், இசை, நடனம், கட்புலக் கலைகள் உள்ளிட்ட கலை போன்ற துறைகளில் பட்டப் படிப்புகளுக்கு 100 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

மௌலானா அசாத் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், பொறியியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் கலைகள் போன்ற துறைகளில் முதுகலை படிப்புக்கு, 50 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

ராஜீவ்காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் (IT/B.E/B.Tech) பட்டப்படிப்புகளுக்கு 25 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் சிறிலங்கா மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான கல்விக் கட்டணங்கள், மாதாந்த உதவிக் கொடுப்பனவு, புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான ஆண்டு கொடுப்பனவு முழுவதையும் உள்ளடக்கியதாக இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் விடுதி வசதிகள், வழங்கப்படும். சுகாதார வசதிகள், இந்தியாவில் அருகில் உள்ள விமான நிலையத்துக்கான பயணச்சீட்டு, கல்விச் சுற்றுலாவுக்கான ஆண்டு கொடை, ஏனைய பல வசதிகளும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பொருத்தமான விண்ணப்பதாரிகள், சிறிலங்கா கல்வி உயர்கல்வி அமைச்சின், www.mohe.gov.lk என்ற இணையத் தளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்யலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள், 2018 ஜனவரி 15ஆம் நாளுக்குள், இந்தியத் தூதரகத்தில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய சிறிலங்காவின் கல்வி, உயர் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும், இந்திய தூதரக இணையத்தில் இதுபற்றிய மேலதிக விபரங்களை பார்வையிட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Puthinappalakai

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்