14 பாடசாலைகளையும் 16 ஆசிரியர்களையும் ஒன்றிணைத்த 45 மாணவர்களின் வெற்றி!

Report Print Tamilini in கல்வி

வடமராட்சி கிழக்கு பாடசாலைகளைச் சேர்ந்த 45 மாணவர்கள் 2017ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளியினை கடந்து சித்தியடைந்துள்ளனர்.

முதலில் பாடசாலை அதிபர்கள், தொடர்புடைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் என இந்த உயர்ந்த பெறுபேற்றுக்கு பங்காற்றிய அனைத்து தரப்பினருக்கும் சுவிஸ் வடமராட்சிக் கிழக்கு ஒன்றியம் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

சுவிஸ் ஒன்றியம் சார்பில் கலந்து கொண்ட ரா. விஜிதகுமார் உரையாற்றுகையில், கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் 28 மாணவர்கள் சித்தியடைந்தார்கள் என்ற நிலையில் இருந்து இந்த வருடம் 45 மாணவர்கள் சித்தியடைந்தனர் என்ற பெறுபேற்று மட்டம் உண்மையிலேயே மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

நாம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில்,

கட்டைக்காடு றோ.க. 4

வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா. 5

வெற்றிலைக்கேணி றோ.க 4

ஆழியவளை சி.சி.த.க 5

உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை 12

மருதங்கேணி இ.த.க பாடசாலை 5

தாழையடி றோ.க. த.க.பாடசாலை 1

செம்பியன்பற்று அரசினர் த.க.பாடசாலை 2

செம்பியன்பற்று றோ.க 1

நாகர்கோவில் ம.வி. 1

நாகர்கோவில் அ.மி.த.க 2

குடத்தனை கரையூர் 1

அம்பன் பாடசாலை 1

மணற்காடு பாடசாலை1

என வடமராட்சி கிழக்கு மாணவர்கள் தம் திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மக்கள் கல்விக்கு மிக முக்கிய இடத்தை கொடுக்க தொடங்கி விட்டார்கள் என்பதுடன் வடமராட்சி கிழக்கை கட்டி எழுப்புவதற்கான தலைவர்கள் மிக மிக வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இச் சித்தியின் அடிப்படையிலேயே தெளிவாகத் தெரிகின்றது.

இன்று தாழையடி றோமன் கத்தோலிக்க பாடசாலையில் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு பாடசாலைகளில் புலமைப் பரிசிலில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் கெளரவிப்பு விழா நடைபெற்றுள்ளது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் நந்தகுமார், சிறப்பு விருந்தினராக மருதங்கேணி கோட்டக் கல்வி அதிகாரி ச.திரவியராஜா, மற்றும் சுவிஸ் ஒன்றியப் பிரதிநிதியாக இராஜேந்திரன் விஜிதகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

மற்றும் பிரதேச பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு வலய கல்விப் பணிப்பாளர் உரையாற்றுகையில்,

வடமராட்சி கிழக்கு பகுதிகள் சுனாமியினாலும் போரினாலும் தொடர்ந்து பாதிப்படைந்திருந்தாலும், இம்மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றது போற்றுதற்குரிய விடயமாகும்.

ஒரு கிராம முன்னேற்றம் என்பது அங்கு மாணவர்கள் வாழும் மாணவச் செல்வங்களில் கைகளில் உள்ளது. இவ்வாறு பின்தங்கிய கிராமங்களை திரும்பிப் பார்க்க வைப்பது இவ் மாணவ செல்வங்களே ஆகும்.

தொடர்ந்து வரும் காலப்பகுதியிலும் இவ்வாறு மாணவர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தற்போதுள்ள மாணவர்களும் ஏனைய பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று தத்தம் பாடசாலைகளை முன்கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

யோக சம்பந்த குருக்கள் மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பித்த இந்நிகழ்வானது, மருதங்கேணி பாடசாலை அதிபர் சிறிராமச்சந்திரனின் வரவேற்புரையோடும், உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் சி. ஜெயந்திரனின் நன்றியுரையோடும் இனிதே நிறைவு பெற்றது.

மேலும் வாழ்வாதார உதவிகள் வத்திராயன் பகுதியில் இரு குடும்பத்திற்கும் நாகர்கோவில் வடக்கும் பகுதியில் ஒரு குடும்பத்திற்கும் தலா ஒரு குடும்பத்திற்கு 30000/= வீதம் சுவிஸ் வடமராட்சிக் கிழக்கு ஒன்றியத்தினரால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்