வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

Report Print Samy in கல்வி

அண்மையில் வெளிவந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வகைப்படுத்தலில் மாகாண மட்டத்தில் வடக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தில் இருப்பதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலைமை அனைவருக்கும் வேதனை தருவதாகும்.

எங்கள் வட மாகாணத்தின் கல்விப் பெறுபேறுகள் முன்னையதை விட உயர்வானதாக இருந்த போதிலும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது அந்த உயர்வு போதுமானதாக இல்லை.

இதனால் மாகாணங்களில் கடைசி நிலையில் எமது கல்வித் தரம் இருப்பதைக் காண முடிகிறது.இது தொடர்பில் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

எனினும் சரியான காரணத்தைக் கண்டறிவது அவசியம்.சரியான காரணத்தை அறியாத வரை, அதற்கு நிவாரணம் தேடாத வரை, ஒன்பதாவது இடம் என்பதை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் எங்களுடன் வைத்திருப்போம் என்பதுதான் உண்மை.

எனவே, இது தொடர்பில் பொறுப்புள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். வட மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம்.போர்ப் பாதிப்பு என்பது எங்களை பல தளங்களில் நலிவுறச் செய்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

போதிய வருமானம் இன்மை, அடிப்படை வசதிகள் இல்லாமை, விவசாயம் மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட தொழில்துறைகளில் மாணவர்களும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை என்பவை காரணமாக கல்வி கற்கின்ற வாய்ப்புக்கள் மிக அரிதாகிப் போகின்ற சந்தர்ப்பங்கள் எங்கள் கல்வியைக் கடுமையாகப் பாதித்துள்ளன எனலாம்.

அதிலும் வடக்கு மாகாணத்தில் சில பிரதேசங்கள் முழுமையாக செயலிழந்து போயுள்ளன. இதனால் அவற்றின் கல்விப் பெறுபேறுகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக கல்வித் தரம் என்று பார்க்கும் போது அது வடக்கு மாகாணத்தை கடைசி நிலைக்குத் தள்ளி விடுகிறது.

எனவே, போரினால் பாதிக்கப்பட்டு இன்னமும் வழமைக்குத் திரும்பாத பிரதேசங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுவது கட்டாயமானதாகும்.

வட மாகாணத்தைப் பொறுத்த வரை இங்கு தனியார் கல்வி நிறுவனங்கள் கணிசமாக இருக்கின்ற போதிலும் அவையும் நகர மையங்களையும் பிரபலமான பாடசாலைகளையும் அண்மித்துச் செயற்படுவதால், அடிமட்ட கிராமத்து மாணவர்களும் அடிப்படை வசதிகள் இல்லாத பிரதேசத்து மாணவர்களும் பாடசாலைக் கல்வியை மட்டும் நம்பி இருக்கின்றனர்.

இத்தகைய மாணவர்கள் போதிய ஆசிரியர்கள் இல்லாமை, குறித்த பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாமை என்ற கஷ்டங்களையும் எதிர்கொள்வதால் உரிய பெறுபேறுகளை அடைய முடியாமல் போகின்றது.

இவை காரணமாகவும் எங்களின் கல்விப் பெறுபேறுகள் கடைசி நிலையில் இருக்க வாய்ப்புண்டு. எனவே, இவை தொடர்பில் சரியான ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அதற்காக ஒரு நாள் எல்லோரும் ஒன்றுகூடி கதைத்துக் காலத்தை போக்குதல் என்றில்லாமல் கல்விப்புலம் சார்ந்த அறிஞர்கள்,ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள், கல்வித்துறை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தரப்புடன் கலந்து ஆலோசனை நடத்தி அவர்களை களத்தில் இறக்கி நிலைமையை ஆராய வேண்டும்.

இதை விடுத்து அதிகாரம் கூடியவர், அதிகாரம் குறைந்தவர்களைக் குறை சொல்வதாக நிலைமை இருந்தால் எங்கள் பெறுபேற்றில் எந்த மாற்றமும் ஏற்படாதென்பது திண்ணம்.

- Valampuri

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments