2018 பட்ஜட் ஓர் ஆறுதல் பரிசு! உடனடி நிவாரணப் பொதி இல்லை

Report Print Rakesh in பொருளாதாரம்
7Shares

நீண்டகால பொருளாதார இலக்குகளை மையப்படுத்தியும், சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கியும், சர்வதேச பொருளாதாரத்தை இலக்குவைத்துமே தேசிய அரசின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெரும்பாலான முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன.

இலத்திரனியல் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், பொலித்தீன் பாவனையற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலைபேண்தகு அபிவிருத்தியின் ஓரங்கமாகவே இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேவேளை, அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, தனியார் துறைக்கான ஊக்குவிப்புகள், அதிரடியான விலை குறைப்புகள் என உடனடியாகத் தாக்கத்தைச் செலுத்திவிடக்கூடிய முன்மொழிவுகள் இந்தப் பட்ஜட்டில் இல்லை.

எனினும், 2018ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் நீண்டகால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டுள்ளன. உடனடியாக பலன்களைத் தராவிட்டாலும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் அவற்றின் பயனை முழுமையாக உணரலாம் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்பக் கல்லூரிகளை அமைத்தல், நவீன முறைக்கேற்ப கல்விக் கட்டமைப்பை மாற்றியமைத்தல் என்பன உள்ளிட்ட விடயங்களை இதற்கான ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், இந்தப் பட்ஜட்டில் எதுவும் இல்லை என்றும், 'வெற்று' பட்ஜட் என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. "சம்பள உயர்வுகள் இல்லை. மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது.

அதை சமாளிப்பதற்குரிய பொறிமுறைகள் இல்லை" என மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பட்ஜட்டில் பெரிதாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையாவிட்டாலும் நேற்றுமுன்தினம் குறைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் திண்டாடிக்கொண்டிருந்த மக்களுக்கு இது சற்று ஆறுதலை இந்தப் பட்ஜட் வழங்கியுள்ளது.

அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் லயன் வாழ்க்கை முறைமைக்குள் முடங்கியுள்ள மலையக மக்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் எனப் பல்துறையினருக்கும் பெரிதாக எதையும் வாரி வழங்காவிட்டாலும், ஒரு ஆறுதல் பரிசாக பட்ஜட் அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தேசிய அரசின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன்படி அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவீனமாக 3,001 பில்லியன் ரூபாவும், மொத்த வருமானமாக 2,326 ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்