கொரோனா வைரஸ் குறித்து புதிய அதிர்ச்சி தகவல்கள்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

Report Print Gokulan Gokulan in நோய்
875Shares

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.80 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், அவுஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா(SARS-CoV-2 ) வைரஸானது காகிதம், கண்ணாடி மற்றும் பிற பொதுவான மேற்பரப்புகளில் பல வாரங்களாக உயிருடன் இருக்கும் என்கிற புதிய ஆய்வு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அஸ்திரேலியாவின் உயர்மட்ட உயிர் பாதுகாப்பு ஆய்வகத்தின் ஆய்வு, ரூபாய் நோட்டுக்கள், தொடுதிரை சாதனங்கள், கைப்பிடிகள் போன்றவற்றில் கொரோனா நாட்கணக்கில் உயிருடன் இருக்கும் என தெரிவித்துள்ளது.

20 டிகிரி செல்சியஸ் அல்லது, 68 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் மேற்குறிப்பிட்ட பொருட்களில் SARS-CoV-2 வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், 40 டிகிரி செல்சியஸில் வெப்பநிலையில் இந்த வைரஸானது ஒரு நாள் மட்டுமே உயிர் வாழும் என வைராலஜி ஜர்னலில் சமீபத்தில் ஒரு கட்டுரையில் கூறியிருந்தது. இதன் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் விஞ்ஞானிகளின் ஆய்வு கொரோனா தொற்று குளிர் காலங்களில் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதை ஓரளவு உறுதி செய்துள்ளது. தொற்றால் உலகம் முழுவதும் 10.76 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வானது கொரோனா வைரஸ் குறித்து இன்னும் துல்லியமாக தெரிந்துகொள்ள உதவும்.

"SARS-CoV-2 நீண்ட காலமாக மேற்பரப்புகளில் தொற்றுநோயாக இருக்கக்கூடும் என்பதை எங்கள் முடிவுகள் காட்டுகின்றன, இது வழக்கமான கை கழுவுதல் மற்றும் மேற்பரப்புகளை சுத்தம் செய்வது போன்ற நல்ல நடைமுறைகளின் தேவையை வலுப்படுத்துகிறது" என்று அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டு செயல்படுகின்ற பொதுச்சுகாதார அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் துணை இயக்குநர் டெபி ஈகிள்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக கொரோனா வைரஸ், தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடனான நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது, குறிப்பாக இருமல், தும்மும்போது, பேசும்போது, பாடும்போது மற்றும் சுவாசிக்கும்போது அவை வெளியேற்றும் வைரஸ் நிறைந்த துகள்களில் ஃபோமைட்டுகள் உருவாகின்றன. இது தொற்று பரவல் வேகத்தினை அதிகரிக்கின்றது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விஞ்ஞானிகளின் இந்த புதிய கண்டுபிடிப்பு கொரோனா தொற்று குறித்த புதிய பார்வையை உருவாக்கியுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்