இதய ரத்த குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகின்றது? பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Report Print Kavitha in நோய்

மனிதன் உயிர் வாழ்வதற்கு ரத்தம் முக்கியமானது ஒன்றாகும். ஏனெனில் ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கும்.

பொதுவாக இதயம் ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.

இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது.

இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்புக்கு வழிவகுக்கின்றது.

இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது?

ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது.

இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது.

காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது.

ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது.

இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

இதற்கு என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

'டிரெட் மில் டெஸ்ட்'

'டிரெட் மில் டெஸ்ட்' இ.சி.ஜி., பரிசோதனையில், மாற்றங்கள் தெரிந்தால், அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை, கண்டறியும் பரிசோதனை இது.

நடைபயிற்சி இயந்திரத்தில் (டிரெட் மில்), குறைந்த வேகத்தில் நடக்க வைப்பர். படிபடியாக வேகத்தை கூட்டி, ஓட வைப்பர். 5 முதல் 10 நிமிடங்கள் வரை பரிசோதனை நடக்கும்.

பயிற்சியின் போது, கை, கால்கள், மார்பு பகுதி என, ஆறு, ஏழு இடங்களில், இ.சி.ஜி., லீட்கள் பொருத்தப்பட்டு, அதை, கம்ப்யூட்டருடன் இணைத்து, பதிவு செய்தால் இதில் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு அனைத்தும் பதிவாகும்.

எந்த நேரத்தில் அவரால் நடக்க முடியவில்லை; எப்போது நெஞ்சு வலி வருகிறது என, துல்லியமாக தெரிந்து விடும்.

உடனடியாக, பயிற்சி நிறுத்தப்பட்டு, ஓய்வு தரப்படும். அப்போதும், இ.சி.ஜி.,யின் மாற்றம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்றால், இதய ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது என இந்த பரிசோதனையின் மூலம் கண்டறியப்படும்.

குரோனரி ஆஞ்சியோ கிராம்

ரத்தக்குழாய் அடைப்பு என, தெரிந்தால், அடுத்த கட்டமாக, 'குரோனரி ஆஞ்சியோ கிராம்' என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

இதில், இதய பாதிப்பை உறுதி செய்து கொள்ளலாம். இதுதான், ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் முடிவான பரிசோதனை.

தொடை அல்லது கையில் உள்ள தமணி வழியாக, நரம்பு போன்ற கத்திட்டரை (சோதனை கருவி) செலுத்தி, இதயம் வரை கொண்டு சென்று, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக என, கண்டறியப்படும்.

தற்போது, பெரும்பாலும் கை மணிக்கட்டு தமணியில் வழியாகவே அதிகம் செய்யப்படுகிறது

கார்டியோ ஜெனிக் ஷாக்

இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், 'கார்டியோ ஜெனிக் ஷாக்' என்று பெயர். இதற்கு பாதிப்பின் தன்மை அதிகமாகும்.

இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, 'ஹீலியம்' என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர்.

அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும்.

இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும்

இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலமா?

நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்.

ஒரே ஒரு ரத்தக்குழாயில் மட்டும், 1 செ.மீ., அளவுக்கு குறைவாக, 80 முதல் 90 சதவீதம் வரை அடைப்பு இருந்தால், அவர்களுக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி' எனப்படும், நரம்பு வழியாக காற்று புகுத்தி செய்யும் பலுான் சிகிச்சை செய்யலாம்.

மூன்று பிரதான ரத்த குழாயில் அடைப்பு இருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதே தீர்வு ஆகும்.

பரிசோதனையை யார் எல்லாம் செய்ய வேண்டும்?

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இனம்புரியாத தலை சுற்றல், மயக்கம், மார்பில் படபடப்பு, மார்பு இருக்க உணர்வு உள்ளோர்.

கொழுப்பு சத்து அதிகம் உள்ளோர் ஒல்லியாக இருந்தாலும், குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளதால், டி.எம்.டி., பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
  • உரிய நேரத்தில் அளவோடு சாப்பிட வேண்டும்.
  • எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • எளிய உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.
  • மன அழுத்தம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • யோகா, தியானம் செய்ய வேண்டும்.
  • சரியான தூக்கமும் வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்