அவுஸ்திரேலியா ரசிகர்களின் இன வெறி தாக்குதல்களை ஏற்று கொள்ள முடியாது என்று இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆகியோர் மீது பார்வையாளர்கள் இனவெறி கருத்துக்களை கூறி சர்ச்சையை எழுப்பினர்.
இது தொடர்பாக மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் மைதானத்தில் இருந்த நடுவர்களிடம் தங்களது புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் 4-வது நாளான இன்றும் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் இருவரைத் தவிர ரோகித் மற்றும் சைனி ஆகியோரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகார் இன்று வைக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சிராஜ் பந்து வீசாமல் நேரடியாக சென்று நடுவரிடம் தனது புகாரை தெரிவித்தார்.
Racial abuse is absolutely unacceptable. Having gone through many incidents of really pathetic things said on the boundary Iines, this is the absolute peak of rowdy behaviour. It's sad to see this happen on the field.
— Virat Kohli (@imVkohli) January 10, 2021
இதனால் போட்டி 10 நிமிடம் வரை தடைபட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி அடைந்த கேப்டன் ரஹானே மற்றும் இந்திய வீரர்கள் அனைவரும் நடுவரிடம் சென்று புகார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக மைதானத்தில் இனவெறி குறித்து குரல்களை எழுப்பிய ரசிகர்களை மைதானத்திலிருந்து நிர்வாகிகள் வெளியேற்றினர்.
ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது இந்தியாவிற்கு திரும்பியுள்ள இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுண்டரி லைனில் இதுபோன்ற தாக்குதல்கள் நிறைய நடக்கின்றன.
இது ரவுடித்தனத்தின் உச்சம். களத்தில் இதுபோல நடப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.