மும்பை அணிக்கெதிரான போட்டியில் அற்புதமாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு வெற்றித் தேடித் தந்த ஆல் ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் யாருடைய பந்து வீச்சாக இருந்தாலும், அதிரடி மூலம் நெருக்கடி தர முடியும் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய மும்பை அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது, இப்போட்டியில் மும்பை அணி குவித்திருந்த 195 ஓட்டங்களை ராஜஸ்தான் அணி அசால்ட்டாக எட்டிப்பிடித்தது.
குறிப்பாக ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ், சதம் அடித்து 107 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், இப்போட்டி குறித்து கூறுகையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருந்தது.
இதனால், இது ஒரு நல்ல வெற்றி. மற்ற போட்டிகளை விட இதில் தன்னம்பிக்கையுடன் இறங்கினேன்.
களத்தில் சிறிது நேரம் செலவிட்டு வெற்றியுடன் திரும்பியது அருமை.
எந்த பந்து வீச்சாளராக இருந்தாலும் பும்ராவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்கள் வீச வரும்போது அவர்களை நெருக்கடிக்குள் தள்ளும் நல்ல நிலையில் இருந்தோம்.
பல கடினமான சூழ்நிலைகளுக்கு இடையே என் குடும்பத்தாருக்கும் இந்தச் சதம் மகிழ்ச்சியளித்திருக்கும். இங்கிலாந்து ரசிகர்களுக்கு பல கடினங்களுக்கு இடையில் இந்த இன்னிங்ஸ் மகிழ்ச்சி கொடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.