பூரன் அதிரடி... டெல்லி அணியை வீழ்த்திய பஞ்சாப்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
158Shares

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 19 ஓவர்களில் 167 ஓட்டங்கள் எடுத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்கள் குவித்தது.

165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதிரடியுடன் தொடங்கினார் ராகுல். ஆனால், அக்சர் படேல் வீசிய முதல் ஓவரிலேயே ராகுல் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில், துஷார் தேஷ்பாண்டே வீசிய 5-வது ஓவரில் அடுத்தடுத்து 4,4,6,4,6 என விளாச அந்த ஓவரில் மட்டும் 26 ஓட்டங்கள் கிடைத்தன.

இதன்மூலம், 5 ஓவர்கள் முடிவிலேயே பஞ்சாப் அணி 50 ஓட்டங்களை எட்டியது. அஸ்வின் வீசிய 6-வது ஓவரில் கெயில் போல்டானார். அவர் 13 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.

அதே ஓவரின் 5-வது பந்தில் அகர்வால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால், பஞ்சாபுக்கு நெருக்கடி அதிகரித்தது.

இருப்பினும், நிகோலஸ் பூரன் டெல்லி பந்துவீச்சாளர்களை மிரட்டத் தொடங்கினார். கிளென் மேக்ஸ்வெல் மறுமுனையில் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடினார்.

தேஷ்பாண்டே வீசிய 9-வது ஓவரில் அடுத்தடுத்து 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள், மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய 10-வது ஓவரில் அடுத்தடுத்து 1 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாச வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 7-க்குக் கீழ் குறைந்தது.

தொடர்ந்து பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து வந்த பூரன் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 6-க்குக் கீழ் குறைத்தார்.

ரபாடா ஓவரில் பவுண்டரி அடித்த அவர் 27-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமும் இழந்தார். பூரன் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 53 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதன்பிறகு, வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவு என்பதால் மேக்ஸ்வெல் மற்றும் தீபக் ஹூடா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பூரன் விக்கெட்டுக்குப் பிறகு மேக்ஸ்வெல்லும் இடையே 3 பவுண்டரிகள் அடிக்க வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 5-க்குக் கீழ் குறைந்தது. இருப்பினும், அவரும் ரபாடா வேகத்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். ஹூடாவுடன் ஜேம்ஸ் நீஷம் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடினார்.

19-வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த நீஷம் வெற்றியை உறுதி செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹூடா 22 பந்துகளில் 15 ஓட்டங்களும், நீஷம் 8 பந்துகளில் 10 ஓட்டங்களும் எடுத்தனர்.

டெல்லி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளும், அக்சர் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்