சார்ஜாவில் கோஹ்லி படையின் சுழல்: 82 ஓட்டங்களில் கொல்கத்தா பரிதாப தோல்வி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
105Shares

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 82 ஓட்டங்களில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

23 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில், படிக்கல் விக்கெட்டை இழக்க, 47 (37) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்து ஃபின்ச் அரை சதத்தை தவறவிட்டார்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா பந்துவீச்சை பறக்கவிட்ட டி வில்லியர்ஸ் 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத டி வில்லியர்ஸ் 73 (33) ஓட்டங்களும், விராட் கோஹ்லி 33 (28) ஓட்டங்களும் குவித்தனர்.

கொல்கத்தா அணியில் ரஸல் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. இந்த முறை தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில்லுடன் அறிமுக வீரர் டாம் பாண்டன் களமிறங்கினார்.

சிராஜ் வீசிய 5-வது ஓவரில் மட்டும் 16 ஓட்டங்கள் கிடைக்க, பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 43 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

நிதிஷ் ராணா 9 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் பந்தில் போல்டானார். இவரைத் தொடர்ந்து, கில் 34 ஓட்டங்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே அணித்தலைவர் கார்த்திக் 1 ரன்னுக்கு சஹால் பந்தில் போல்டானார். அதற்கு அடுத்த ஓவரில் மார்கன் 8 ஓட்டங்களுக்கு சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ரஸலும், திரிபாதியும் மட்டுமே இருந்தனர். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 16 ஆக இருந்ததால், இருவருக்கும் மிகப் பெரிய நெருக்கடி இருந்தது.

இந்த நிலையில் உடானா வீசிய 14-வது ஓவரை பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என அதிரடியுடன் தொடங்கினார் ரஸல்.

ஆனால், இதற்கு அடுத்த பந்திலேயே அவரும் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் (1), திரிபாதி (16), நாகர்கோடி (4) என வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதன்மூலம், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நடு ஓவர்களில் வாஷிங்டன் சுந்தரும், சஹாலும் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது.

பெங்களூரு தரப்பில் வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், இசுரு உடானா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்