அசத்தல் பந்துவீச்சு... பூரண் அதிரடி வீண்: பஞ்சாப்பை வீழ்த்திய ஹைதராபாத்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 132 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேரிஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

15 ஓவர்களுக்கு 160 ஓட்டங்கள் குவித்தது அவர்களின் பார்ட்னர்ஷிப். அரை சதம் கடந்த வார்னர் 52 (40) ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

அதே ஒவரில் 97 (55) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்த பேரிஸ்டோவ் சதத்தை தவறவிட்டார். இதற்கிடையே மணிஷ் பாண்டே வந்த வேகத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.

கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தங்கள் பங்கிற்கு சற்று அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 201 ஓட்டங்கள் குவித்தது.

பஞ்சாப் அணியில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் சிங் 33 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

202 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. இந்த சீசனில் சிறப்பான தொடக்கம் அளித்து வந்த கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலுக்கு இந்த முறை தொடக்கம் மோசமாக அமைந்தது.

அகர்வால் 2 ஓவரிலேயே 9 ஓட்டங்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் 3-வது வீரராக மந்தீப் சிங்குக்குப் பதில் சிம்ரன் சிங் களமிறக்கப்பட்டார்.

அவர் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணித்தலைவர் ராகுலுடன் இணைந்த நிகோலஸ் பூரண் சிக்ஸர்களாக அடித்து அதிரடி காட்டத் தொடங்கினர். ஆனால், ராகுல் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து, பூரண் சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினார். அப்துல் சமத் வீசிய 9-வது ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் உள்பட 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 28 ஓட்டங்கள் எடுத்து மிரட்டினார் பூரண்.

இதன்மூலம், தனது 17-வது பந்திலேயே அவர் அரைசதத்தை எட்டினார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல்(7), மந்தீப் சிங்(6) ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி பரிதாப நிலைக்கு உள்ளானது.

கடைசி நம்பிக்கை வீரராக பூரண் மட்டுமே இருந்தார். இதனால், அவருக்கு நெருக்கடி இருந்தது.

இந்த நிலையில் தனது கடைசி ஓவரை வீச ரஷித் கான் வந்தார். எதிர்முனையில் பந்துவீச்சாளர் என்பதால், ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் ரன் எடுப்பதை தவிர்த்தார் பூரண்.

விளைவு 5-வது பந்தில் பூரண் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 77 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த வீரர்கள் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், ஹைதராபாத் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நட்ராஜன் மற்றும் கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்