புள்ளிப்பட்டியலில் RCB முதல் இடம்! ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கோஹ்லி படை

Report Print Santhan in கிரிக்கெட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கோஹ்லியின் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி முதல் போட்டியாக கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில், நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன் படி, அந்த அணியின் துவக்க வீரர்களாக ஸ்மித், படலர் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே பட்லர் வாணவேடிக்கை நிகழ்ந்த தொடங்கினார்.

ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஸ்மித் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பட்லரும் வெளியேறினார்.

அவர் 12 பந்தில் 22 ஓட்டங்கள் அடித்தார். அதற்கு அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் 4 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று முக்கிய வீரர்கள் பெளலியன் திரும்பியதால், ராஜஸ்தான் அணி திணறியது.

அதன் பின் வந்த ராபின் உத்தப்பா 17 ஓட்டங்களில், வெளியேறினார். ஆனால் இளம் வீரரான லாம்ரோர் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். 39 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதியாக 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. டெவாட்டியா 12 பந்தில் 24 ஓட்டங்களும், ஜாஃப்ரா ஆர்சர் 10 பந்தில் 16 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், உடானா 2 விக்கெட்டும், சைனி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஆரோன் பிஞ்ச் 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து படிக்கல் உடன் ஜோடி சேர்ந்த கோஹ்லி, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஓவர் செல்ல செல்ல கோஹ்லி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். படிக்கல் 37-வது பந்தில் அரைசதம் அடித்தார். நான்கு போடடிகளில் 3-வது அரைசதம் இதுவாகும். மறுமுனையில் கோஹ்லி 41 பந்தில் அரைசதம் அடித்தார்.

அணியின் எண்ணிக்கை 15.5 ஓவரில் 124 ஓட்டங்களாக இருக்கும்போது படிக்கல் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்க, இருப்பினும் கோஹ்லி அதிரடி ஆட்டம் ஆடினார்.

18-வது ஓவரில் கோஹ்லி மூன்று பவுண்டரிகள் விளாச, 19.1 ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

விராட் கோஹ்லி 53 பந்தில் 72 ஓட்டங்களுடனும், டி வில்லியர்ஸ் 10 பந்தில் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி என மொத்தம் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்