கேஎல் ராகுல் வெறித்தனம்.... பஞ்சாப் அணியிடம் பரிதாபமாக வீழ்ந்தது பெங்களூரு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

கிங்ஸ் லெவன் பஞசாப் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பரிதாப தோல்வியை சந்தித்துள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் மயங்க் அகர்வால் சற்று தடுமாறினார்.

பவர் பிளே-யில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்கள் சேர்த்தது. 6-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மயங்க் அகர்வால் 20 பந்தில் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அடுத்து நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை உடனடியாக தொடங்கவில்லை.

10-வது ஓவரில் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்சருன் 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்க பஞ்சாப் அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து பூரன் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ஓட்டங்களில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடி கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

17-வது ஓவரின் கடைசி பந்திலும், 18-வது ஓவரின் கடைசி பந்திலும் விராட் கோஹ்லியிடம் கொடுத்த கேட்ச்-ஐ தவறவிட்டார்.

ஸ்டெயின் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார்.

மேலும் 4வது, ஐந்தாவது பந்துகளை சிக்சருக்கு தூக்கி கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். ஸ்டெயின் இந்த ஓவரில் 26 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் பஞ்சாப் அணி 23 ஓட்டங்கள் விரட்ட 20 ஓவரில 3 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் குவித்தது.

வெறித்தனமாக விளையாடிய கேஎல் ராகுல் 69 பந்தில் 14 பவுண்டரி, 7 சிக்சருடன் 132 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் இந்த சீசனில் முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

இதனையடுத்து, 207 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 4 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் சரிந்தன.

அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய படிக்கல் இந்தப் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 30, டிவில்லியர்ஸ் 28, பின்ச் 20 ஓட்டங்கள் எடுக்க எஞ்சியவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பெங்களூரு அணி 109 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பஞ்சாப் அணியில் பிஸ்னோவ், முருகன் அஸ்வின் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். காட்ரெல் இரண்டு விக்கெட் சாய்த்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்