கடைசி ஓவரில் காட்டடி அடித்த ஆர்ச்சர்! திணறி போன சென்னை: ராஜஸ்தான் அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தைல் சென்னை அணியை, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜ்ஸ்தான் அணியும் இன்று மோதின.

அதன் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. அதன் படி ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் உடன் ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார்.

இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால் 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் களம் இறங்கியதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எண்ணிக்கை வேகமெடுக்க ஆரம்பித்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்து சஞ்சு, பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார்.

அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் அடித்து 19 பந்தில் அரைசதம் அடித்தார். அதே ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸ் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஆட்டத்தின், 12-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 9 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 74 ஓட்டங்கள் குவித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டேவிட் மில்லர் ரன்அவுட் ஆனார்.

அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 200-ஐ தாண்டுமா என்று எதிர்பார்த்து கொண்டிருந்த போது லுங்கி நிகிடி வீசிய கடைசி ஓவரை ஆர்ச்சர் துவம்சம் செய்துவிட்டார்.

முதல் நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ஓட்டம் தாண்டியது. கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் கிடைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் குவித்தது.

217 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முரளி விஜய், வாட்சன் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கத்தில் இருவரும் சற்று தடுமாறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ஓட்டங்களுடனும், வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜய் 21 பந்தில் 21 ஓட்டதுடன் நடையை கட்டினர்.

அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். கர்ரன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்தில் 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து அடுத்தடுத்து வந்த வீரர்கள், வெளியேற, தனி ஒருவனாக டூபிளசிஸ் மட்டும் சென்னை அணியை வெற்றி பெற வைக்க போராடினார்.

ஆனால், இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால், சென்னை அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடி வந்த டூ பிளசிஸ்37 பந்துகளில் 7 சிக்சர்கள் உள்பட 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்