இனவெறிக்கு எதிரான கல்வி அறிவு கிரிக்கெட் வீரர்களுக்கு அவசியம்! வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி வீரர் சமி ஆதங்கம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஊழல் போல் இனவெறி பற்றிய கல்வி அறிவும் கிரிக்கெட் வீரர்களுக்கு அவசியம் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளை நிற காவல் அதிகாரி ஒருவர் தனது கால் முட்டியை, கருப்பின மக்களில் ஒருவரான ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் வைத்து நெரித்ததில் அவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம், உலகம் முழுவதும் கண்டன குரல்களை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் கண்டன பேரணிகள் நடந்தன.

இதனால் இனவெறி உலகளாவிய விவாத பொருளாக மாறியுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும்பொழுது, சன் ரைசர்ஸ் அணியின் சக வீரர்கள் சமியை, காலு என அழைத்துள்ளனர். காலு என்பது கருப்பின மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இதற்கு அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி இந்த மாத தொடக்கத்தில் வலியுறுத்தினார். இதற்கு வெஸ்ட் இண்டீசின் மற்றொரு முன்னாள் வீரரான கிறிஸ் கெய்ல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

டேரன் சமி தலைமையிலான அணி டி20 உலக கோப்பை போட்டியில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடியால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இன்சைட் அவுட் என்ற பெயரிலான நிகழ்ச்சியை ஆன்லைன் வழியே நடத்தி கிரிக்கெட் வீரர்களிடம் பேட்டி கண்டது.

இதில் பேசிய டேரன் சமி, ஊக்க மருந்து அல்லது ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான கல்வியறிவை இளம் கிரிக்கெட் வீரர்கள் பெற்றிருப்பது அவசியம் என்ற சூழல் உள்ள நிலையில், இனவெறிக்கு எதிரான கல்வியறிவையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். இதனால் பன்முக தன்மையை பற்றி இளம் வீரர்கள் புரிந்து கொள்ள முடியும் என கூறினார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான டாம் மூடி, நம்முடைய கிரிக்கெட் சமூகத்தில் உள்ள, கேப்டன், மூத்த வீரர், பயிற்சியாளர் அல்லது நிர்வாகி என யாராக இருப்பினும், பல்வேறு தளங்களிலும் கல்வியறிவு பெற்றவராக இருக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் உள்ள பல்வேறு மட்டங்களிலான இனவெறி பற்றிய புரிதல் அவற்றில் ஒன்று என அவர் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்