வரலாற்று வெற்றி: இந்தியாவை சுருட்டி வீசிய வங்கதேச புயல்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

அண்டர் 19 உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய வங்கதேச அணி வரலாறு படைத்தது.

அண்டர் 19 உலகக்கிண்ணம் இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் நாணயசுழ்ற்சியில் வங்கதேசம் வென்றது. அந்த அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

இந்தியா துவக்கத்தில் படு நிதானமாக விளையாடியது. முதல் 10 ஓவர்களில் 23 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. துவக்க வீரர் சக்சேனா 17 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் - திலக் வர்மா, நிதான ஆட்டம் ஆடி அணியை காப்பாற்ற போராடினர். விக்கெட் விழாவிட்டாலும், அவர்களால் எளிதாக ஓட்டங்களை குவிக்க முடியவில்லை.

திலக் வர்மா 38 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ப்ரியம் கார்க் 7, துருவ் 22 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஜெய்ஸ்வால் மட்டுமே பிட்ச்சின் தன்மையை சரியாக புரிந்து கொண்டு நிதான ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார்.

அவர் 88 ஓட்டங்கள் குவித்த நிலையில், ஆட்டமிழந்தார். அது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது.

அப்போது 156 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது இந்திய அணி.

அதன் பின், விக்கெட்கள் சீட்டுக் கட்டாக சரிந்தது. இந்தியா 47.2 ஓவர்களில் 177 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.

178 ஓட்டங்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி அதிரடியாக ஆடத் துவங்கியது வங்கதேசம். துவக்க வீரர்கள் இமோன், ஹாசன் அதிரடியாக துவக்கி, பின் நிதான ஆட்டம் ஆடினர்.

ஹாசன் 17 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து ஜாய், ஹிரிதோய் ஷாஹத் ஹுசைன் ஒற்றை இலக்கங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் மட்டுமே தனியாக முதல் நான்கு விக்கெட்களை வீழ்த்தி, இந்திய அணி பக்கம் போட்டியை எடுத்து வந்தார்.

அப்போது 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது வங்கதேசம்.

பின்னர் 143 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இழந்த அந்த அணிக்கு கேப்டன் அக்பர் அலி மட்டும் நம்பிக்கை அளித்து நிதான ஆட்டம் ஆடி வந்தார்.

இடையே 41 ஓவர்கள் முடிவில் மழை குறுகிட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்களும், வங்கதேச அணிக்கு 15 ஓட்டங்களும் தேவை என்ற நிலையில் மழை வந்தது.

மழை சில நிமிடங்களில் நின்றது. போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 170 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து, வங்கதேசம் 7 ஓட்டங்கள் எடுத்து 42.1 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்பர் அலி 43 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை அணிக்கு தூணாக நின்றார்.

வங்கதேச அணி கிரிக்கெட் உட்பட, எந்த விளையாட்டிலும் உலக அளவிலான தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை.

இந்த நிலையில், அண்டர் 19 உலகக்கிண்ணம் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்றதோடு ஆதிக்கம் செலுத்தி வலுவான இந்திய அணியை வீழ்த்தி தன் முதல் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது குட்டிப் புலிகள் அணி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்