இளம்வயதிலே டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த வீரர்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த 16 வயதான வேகப்பந்து வீச்சாளர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த பின்னர், தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 445 ரன்களை குவித்தது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய வங்கதேச அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலையில் உள்ளது.

அந்த அணி தோல்வியை தவிர்க்க எஞ்சியிருக்கும் நான்கு விக்கெட்டுகளை வைத்து 86 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த போட்டியின் போது 41வது ஓவரை வீசிய பாகிஸ்தானை சேர்ந்த 16 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா, வங்கதேச அணிக்காக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கொண்டிருந்த நஸ்முல் ஹொசைன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

அவரை தொடர்ந்து தைஜுல் இஸ்லாத்தையும், மஹ்மதுல்லாவையும் வீழ்த்தி,இளம்வயதிலே டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற வரலாற்று சாதனை படைத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்