10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி..! இந்தியா பரிதாப தோல்வி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியானது இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 49.1 பந்துகளுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 255 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித்சர்மா 10 ரன்களுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு கூட்டணி சேர்ந்த ஷிகர் தவான் (74) - லோகேஷ் ராகுல் (47) நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டிற்கு 121 ரன்களை சேர்ந்தனர்.

ஆனால் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட்கோஹ்லி (16) உள்ளிட்ட அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்க தவறியதால் அணி தடுமாற ஆரம்பித்தது.

அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா, அஸ்டோன் அகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 128 (112 பந்துகள்) மற்றும் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 110 (114 பந்துகள்) ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர்.

கடைசிவரை ஒரு விக்கெட்டு கூட எடுக்க முடியாமல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் திணற, அவுஸ்திரேலிய அணி 37.4 பந்துகளிலே வெற்றிக்கனியை ருசித்தது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்