பலமாக ஹெல்மெட்டில் தாக்கிய பந்து... ரிஷாப் பந்த் காயம்! ராகுலுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் துடுப்பாடும் போது இந்திய வீரர் ரிஷாப் பந்த் காயமடைந்ததை அடுத்து ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார்.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக தவான் 74 ஓட்டங்கள் அடித்தார். அவுஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸின் 44வது ஓவரில் அவுஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் பவுன்சர் வீச, பந்து துடுப்பாடி ரிஷாப் பந்த்தின் துடுப்பில் பட்டு பின் ஹெல்மெட் மீது பலமாக தாக்கியது. எனினும், பந்தை ஆஷ்டன் டர்னர் கேட்ச் பிடிக்க ரிஷாப் பந்த் 28 ஓட்டங்களில் நடையை கட்டினார்.

இந்நிலையில், பந்து ஹெல்மெட்டில் தாக்கியதில் ரிஷாப் பந்த்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ரிஷாப் பந்த் துடுப்பாடும் போது ஹெல்மெட் மீது பந்து தாக்கியதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இல்லாத நிலையில் கே.எல்.ராகுல் விக்கெட்டு கீப்பராக செயல்படுவார். தற்போது பந்த் கண்காணிப்பில் உள்ளார் என்று பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல், இந்தியாவுக்கு விக்கெட் கீப்பிங் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

256 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சிறப்பாக துடுப்பாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்