முதல் போட்டியிலே இந்தியாவை கதறவிட்ட மேற்கிந்திய தீவு... ருத்ரதாண்டவம் ஆடிய ஹிட்மர்! அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்து வீச்சை தெரிவு செய்ய, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

கே.எல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லோகேஷ் ராகுல் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோஹ்லி 4 ஓட்டங்களில் பெளலியன் திரும்ப, இந்திய அணி 7 ஓவரில் 25 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கையுடன் பந்தை எதிர்கொண்டார். அதேவேளையில் ரோகித் சர்மாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இருவரும் நிதானமாக விளையாட இந்தியா அணியின் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர்.

அரைசதம் அடித்த பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இதனால் இந்தியாவின் எண்ணிக்கை எளிதாக 300 ஓட்டங்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 36.4 ஓவரில் அணியின் எண்ணிக்கை 194 ஓட்டங்களாக இருந்த போது, ஷ்ரேயாஸ் அய்யர் 88 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 70 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 39.4 ஓவரில் 210 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பண்ட் 69 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 71 ஓட்டங்கள் சேர்த்தார்.

கேதர் ஜாதவ் 35 பந்தில் 40 ஓட்டங்கள், இறுதியில் ஷிவம் டுபே அதிரடி ஆட முயன்று 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்தது.

289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணிக்கு, ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் சுனில் அம்ப்ரிஸ் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாய் ஹோப் ஒரு பக்கம் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஹெட்மையர் 50 பந்திலும், ஷாய் ஹோப் 92 பந்திலும் அரைசதம் அடித்தனர். 50 பந்தில் அரைசதம் அடித்த ஹெட்மையர் 85 பந்தில் சதம் அடிக்க, அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறியது.

சதம் அடித்த ஹெட்மையர், 106 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 139 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷாய் ஹோப் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 47-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து 8-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஹெட்மையர், ஷாய் ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் 102 ரன்னுடனும், பூரன் 29 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவு அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்