இலங்கை கையில் ராவல்பிண்டி டெஸ்ட் முடிவு: வெற்றி..தோல்வியா? டிராவா? காத்திருக்கும் பாகிஸ்தான்

Report Print Basu in கிரிக்கெட்

ராவல்பிண்டியில் பாகிஸ்தான்-இலங்கை இடையேயான முதல் டெஸ்டின் நான்காவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது.

தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

அதன் படி இரு அணிகளுக்கும் இடையேயான வரலாற்று சிறப்பமிக்க முதல் டெஸ்ட் போட்டி கடந்த 11ம் திகதி ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்கியது.

நாணய சுழற்சியல் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. போட்டி தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நான்காவது நாள் முழுமையாக கைவிடப்பட்டது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தனஞ்ஜெய டி சில்வா 87 ஓட்டங்களுடனும், தில்ருவன் பெரேரா 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நாளை கடைசி மற்றும் 5வது நாள் போட்டி நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது என கூறப்படுகிறது.

அதேசமயம், போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 20 புள்ளிகள் வழங்கப்படும். ஆனால், இலங்கை இன்னிங்ஸை டிக்ளர் செய்து, 80 ஓவர்களில் 283 ஓட்டங்களை எடுக்க பாகிஸ்தானுக்கு சவால் விட்டால், இரண்டில் ஒரு அணி கட்டாய வெற்றிப்பெற்று 60 புள்ளிகளை பெறும்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில், இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 1 வெற்றி, 1 தோல்வி என 60 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் அணி புள்ளிகள் ஏதுமின்றி 7வது இடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...