19 பவுண்டரிகள்... 6 சிக்ஸர்... எதிரணியை மிரட்டிய 16 வயது இந்திய வீராங்கனை!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய ஏ அணிக்கெதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் ஏ அணியின், இளம்வீரங்கனையான ஷஃபாலி வர்மா வெறும் 78 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

இந்திய பெண்கள் ஏ அணி மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் ஏ அணி மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் பீல்டில் புதன்கிழமையன்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 8 ரன்கள் எடுத்திருந்த போது, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது.

அந்த சமயத்தில் களமிறங்கிய அனுபவ வீராங்கனையான வேத கிருஷ்ணமூர்த்தி, ஷஃபாலி வர்மாவுடன் கூட்டணி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 119 ரன்களை சேர்த்தார்.

22வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுப்பதற்கு முன் ஷஃபாலி வர்மா மட்டும் 19 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 78 பந்துகளில் 124 ரன்களை எடுத்திருந்தார். அவர் அவுட்டானபோது அணி 167 ரன்கள் எடுத்திருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் அனைத்தும் சரிய, மறுபுறம் நிதானமாக ஆடிய வேத கிருஷ்ணமூர்த்தி, 99 பந்துகளில் 113 ரன்களை எடுத்தார்.

ஆட்டநேர இறுதியில் இந்திய ஏ அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 312 ரன்களை குவித்திருத்தது.

இதனையடுத்து 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய ஏ அணியில், தொடக்க ஆட்டக்காரர் தஹ்லியா மெக்ராத் (97), அன்னாபெல் சதர்லேண்ட் (52) மற்றும் ஹீதர் கிரஹாம் (27) கணிசமான ரன்களை குவித்தனர்.

சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை எடுத்ததால், அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்