முதல் டி 20 போட்டி: விட்டு விளாசிய விராட் கோஹ்லி... தூள் தூளான மேற்கிந்திய தீவுகள்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி, கே எல் ராகுல் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேரிவு செய்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் லென்டில் சிம்மன்ஸ் - எவின் லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சிம்மன்ஸ் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து லிவிஸ் உடன் பிராண்டன் கிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது.

லிவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ஓட்டங்களும், கிங் 31 ஓட்டங்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

அடுத்து இறங்கிய ஹெட்மையர் 41 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ஓட்டங்கள் விளாசினார். தொடர்ந்து பொல்லார்டு 19 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் குவித்தது. ஹோல்டர் 9 பந்தில் 24 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 208 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா இறங்கினர்.

ரோகித் சர்மா 8 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி ராகுலுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் இணைந்து கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக விளாசினர். முதலில் அரை சதம் கடந்த கேஎல் ராகுல் 62 ஓட்டங்களில் வெளியேறினார். இவர் கோஹ்லியுடன் இணைந்து 100 ஓட்டங்கள் சேர்த்தார்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த்(18), ஷ்ரேயஸ் அய்யர்(4) ஓட்டங்களில் வெளியேற, மறுமுனையில் தூணாக நின்ற விராட் கோஹ்லி தனது அதிரடியை தொடர்ந்தார்.

அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

விராட் கோஹ்லி 50 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 94 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்