இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில், ரோஹித் ஷர்மா டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிரட்டும் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா, டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா, அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இடம்பிடித்துள்ளார்.
இந்த தொடரின் முதல் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதற்கு முன்பாக 3 நாள் கொண்ட பயிற்சி ஆட்டம் நடந்தது.
இதில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் மார்க்ராம் 100 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்கள் எடுத்தபோது கடைசி நாள் ஆட்டம் முடிந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

இந்திய அணியின் இன்னிங்சில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். மயங்க் 39 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால், ரோஹித் ஷர்மா 2வது பந்திலேயே ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக ரோஹித் களமிறங்குவார் என்று இந்திய அணி அறிவித்திருந்தது. ஆனால், அவர் பயிற்சி ஆட்டத்தில் டக்-அவுட் ஆகியுள்ளது, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.