60 பந்தில் சதம்.. 6 சிக்சர்கள் விளாசல்.. மிரட்டிய இலங்கை வீராங்கனை!

Report Print Kabilan in கிரிக்கெட்
128Shares

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், இலங்கை வீராங்கனை சமரி அதப்பட்டு 66 பந்துகளில் 113 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.

அவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் மகளிர் டி20 போட்டி, சிட்னியின் ஓவல் மைதானத்தில் இன்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில், தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி 21 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த லன்னிங் ஒரு ரன்னில் அவுட் ஆக, பின் களமிறங்கிய கார்ட்னர் மற்றொரு தொடக்க வீராங்கனை பெத் மூனியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

பவுண்டரிகளாக விளாசிய மூனி, 61 பந்துகளில் 113 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். கார்ட்னர் 27 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.

எனினும், தொடக்க வீராங்கனை சமரி அதப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அவர்களின் பந்துவீச்சை சிதறடித்த சமரி, 60 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

அணியின் ஸ்கோர் 161 ஆக உயர்ந்தபோது சமரி அதப்பட்டு 66 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அவருக்கு பின்னால் வந்த வீராங்கனைகள் சொதப்பியதால், இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்