ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று மிகவும் கெஞ்சினேன்! மனம்திறந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்

Report Print Kabilan in கிரிக்கெட்
516Shares

நான் போராடி, கெஞ்சி தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினேன் என, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார். ஆனால், 1994ஆம் ஆண்டு தான் அவர் தொடக்க வீரராக விளையாடினார்.

நடுகள வீரராக விளையாடி வந்த சச்சின், நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அந்த ஒருநாள் போட்டியில் தான் முதல் முறையாக தொடக்க வீரராக களம் கண்டார்.

அவர் தொடக்க வீரராக களமிறங்கிய 5 போட்டிகளில் 82, 63, 40, 63, 73 ஓட்டங்கள் எடுத்தார். மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் தொடக்க வீரராக களமிறங்கியது குறித்து சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘1994ஆம் ஆண்டு நான் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியபோது, அப்போது இருந்த அணிகள் தொடக்கத்தில் விக்கெட் இழக்காமல் விளையாடுவதை யுக்தியாக வைத்திருந்தனர்.

ஆனால், இதிலிருந்து மாறுபட்ட யுக்தியை கையாள நினைத்தேன். அதாவது ஆட்டத்தின் தொடக்கம் முதலே நான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன். எனினும் நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க மிகவும் போராடினேன். அத்துடன் அணி நிர்வாகத்திடம் எனக்கு தொடக்க வீரராக களமிறங்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று மிகவும் கெஞ்சினேன்.

நான் இந்த முயற்சியில் தோல்வியடைந்தால் மீண்டும் உங்களிடம் வந்து வாய்ப்பு கேட்க மாட்டேன் எனக் கூறினேன். எனக்கு வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியில் நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, 49 பந்துகளில் 82 ஓட்டங்கள் அடித்தேன்.

அதற்கு பிறகு நான் வாய்ப்பு கேட்கவில்லை. அவர்களே என்னை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். இதன்மூலம் நான் கூற வருவது எப்போதும் தோல்வியை கண்டு பயப்படாதீர்கள் என்பதுதான்’ என தெரிவித்துள்ளார். தனது ஓய்வு வரை இந்திய அணியின் தொடக்க வீரராகவே சச்சின் டெண்டுல்கர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்