மைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்தது ஏன்? இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தை பவுன்சர் பந்தால், தாக்கிவிட்டு, அதன் பின் ஆர்ச்சர் சிரித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தவர், ஸ்மித் தான், இவர் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தார்.

அந்த வகையில் முதல் இன்னிங்ஸின் 77-வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்மித் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை தலைக்கு நேராக பவுன்ஸராக வீசினார். அந்த பந்தை அடித்தால் விக்கெட் போய்விடும் என்பதால் அதை அடிக்கவும் முடியாது.

148 கி.மீற்றர் வேகத்தில் ஆர்ச்சர் வீசிய அந்த பவுன்ஸருக்கு ஸ்மித் ரியாக்ட் செய்வதற்குள், பந்து வேகமாக வந்து ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் பலமாக அடித்தது.

அதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஸ்மித். உடனடியாக பிசியோ வந்து பரிசோதித்தார். அதன்பின்னர் ஸ்மித் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். பின்னர் சிடில் விக்கெட்டுக்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்த ஸ்மித், அதன்பின்னர் பெரிதாக ஆடவில்லை. 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்துவிட்டார்.

இதில் ஸ்மித் வலியால் மைதானத்தில் துடித்துக் கொண்டிருந்த போது, ஆர்ச்சர், பட்லரிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், ஆர்ச்சரை அனைவரும் திட்டினர். இதையடுத்து இது குறித்து ஆர்ச்சர் கூறுகையில், ஸ்மித் கீழே விழுந்ததை கண்டு எங்கள் இதயமே நொறுங்கியது. அவர் திரும்ப எழுந்த பின்னர் தான் எங்களுக்கு உயிரே வந்தது. யாரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்ல வேண்டும் என்று யாருமே நினைக்கமாட்டார்கள், நாங்கள் அப்போது பேசி சிரித்தது வேறு என்று ஆர்ச்சர் உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்