ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த முறையை மாற்ற வேண்டும்! தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் கல்லீஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும் என, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜேக் கல்லீஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக, முன்னாள் ஜாம்பவான்களை உலகக்கோப்பைக்கான தூதராக ஐ.சி.சி நியமித்தது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜேக் கல்லீஸும் அந்த தூதரில் ஒருவராக இருந்தார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்கும் பவர்பிளே விதிமுறையால் பந்துவீச்சாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் வகையில் விதிமுறையை மாற்ற வேண்டும் எனவும் கல்லீஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11 ஓவர் முதல் 40 ஓவர் வரை நான்கு வீரர்கள் மட்டுமே உள்வட்ட எல்லைக்கு வெளியே நிற்க வேண்டும். பேட்டிங் செய்வதற்கு சாதகமான பிளாட் ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு, ஐந்து பீல்டர்கள் வெளியே நிற்கலாம் என்ற பழைய முறையை கொண்டு வர வேண்டும். பந்துவீச்சாளர்கள் எத்தனை வீரர்கள் அவுட் பீல்டிங் பகுதியில் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். இது நடந்தால் பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆடுகளங்கள் 350 ஓட்டங்களுக்கு மேல் அடிப்பதற்கு சாதகமானதாக இருக்கக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த கல்லீஸ், சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers