உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முடிவை இப்படி தீர்மானித்திருக்கலாம்: சச்சின் டெண்டுல்கர் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றியை தீர்மானிக்க, இன்னும் ஒரு சூப்பர் ஓவர் வைத்திருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்ற பின்னர் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பவுண்டரிகள் மூலம் எப்படி வெற்றியை தீர்மானிக்கலாம் என்ற விமர்சனங்கள் இன்னும் குறையவில்லை.

ஐ.சி.சி தனது விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இன்னும் ஒரு சூப்பர் ஓவர் வைத்திருக்கலாம் என்றே எனக்கும் தோன்றியது. பவுண்டரிகள் வைத்து வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதைக் காட்டிலும் அதுதான் சரியானதாக இருந்திருக்கும்.

இதை உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்பதால் மட்டுமே கூறவில்லை. எல்லாப் போட்டிகளுமே முக்கியமான போட்டிகள் தான்’ என தெரிவித்துள்ளார். மேலும், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் நாக்-அவுட் சுற்றுகளில் மாற்றம் வேண்டுமா? என்ற கேள்வி அவர் முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சச்சின், ‘நிச்சயமாக மாற்றம் தேவை என்று நினைக்கிறேன். டாப் அணிகளுக்கு நிச்சயம் ஏதாவது வாய்ப்பு அளிக்க வேண்டும். காரணம் தொடர் முழுவதும் நிலையான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers