240 ஓட்டங்கள் இலக்கு.. ரிஷாப் பண்ட்டை தொடர்ந்து ஏமாற்றிய ஹர்திக் பாண்ட்யா! லைவ் அப்டேட்

Report Print Kabilan in கிரிக்கெட்
443Shares

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் 240 ஓட்டங்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது.

மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று, துடுப்பாட்டத்தை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் களமிறங்கினர். போட்டியின் 4வது ஓவரை வீசிய பும்ரா, நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலை ஆட்டமிழக்க செய்தார். கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்த கப்தில் ஒரு ரன்னில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். அவர் நிதான ஆட்டத்தை கடைபிடித்த அவர் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் 28 ஓட்டங்களிலும், நீசம், கிராண்ட்ஹோம் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், அனுபவ வீரர் ராஸ் டெய்லர் பொறுமையுடன் விளையாடி அணியை மீட்டார். நங்கூரம் போல் நின்று விளையாடி அவர் 50வது அரைசதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டது.

டக்-வொர்த் லீவிஸ் முறையை கடைபிடிக்கலாம் என்ற நிலையில், மழை நிற்காததால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. டெய்லர் 67 ஓட்டங்களுடனும், லாதம் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மறுதினம் (இன்று) ஆட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ராஸ் டெய்லரை (74) மிரட்டலாக ஜடேஜா ரன் அவுட் செய்தார்.

அதன் பின்னர் லாதம் (10) அடித்த பந்தை எல்லைக் கோட்டில் நின்றிருந்த ஜடேஜா கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிதளவில் ஓட்டங்கள் எடுக்கவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா, ஜடேஜா, சஹால் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 240 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

சாதனை படைப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா (1), இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஹென்றியின் ஓவரில் லாதமிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அவரும் ஒரு ரன்னில் போல்ட் ஓவரில் அவுட் ஆனார். பின்னர் தொடக்க வீரர் கே.எல். ராகுலை வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி அவுட்டாக்கினார்.

சிறிது நேரம் களத்தில் நின்ற தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை நீஷம் மிரட்டலாக கேட்ச் செய்து வெளியேற்றினார். எனினும் ரிஷாப் பண்ட்-பாண்ட்யா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஆனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் 13 ஓவர்கள் மட்டுமே நீடித்தது. பொறுமையுடன் ஆடிக்கொண்டிருந்த ரிஷாப் பண்ட் அவசரப்பட்டு ஷாட் ஒன்றை அடிக்க கிராண்ட்ஹோம் அதனை கேட்ச் பிடித்தார். அவர் 56 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய டோனியுடன், கைகோர்த்த பாண்ட்யா வழக்கமான அதிரடி ஆட்டத்தை கைவிட்டு நிதானமாக ஆடினார். ஆனால், அணியின் ஸ்கோர் 96 ஆக உயர்ந்தபோது சாண்ட்னர் ஓவரில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து பாண்ட்யா(32) ஆட்டமிழந்தார்.

தற்போது ஆல்-ரவுண்டர் ஜடேஜா களமிறங்கிய நிலையில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 97 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்