தவறு டோனியிடம் இல்லை.. நம்மிடம் தான் உள்ளது! குரல் கொடுக்கும் கபில் தேவ்

Report Print Kabilan in கிரிக்கெட்
208Shares

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனியிடம் நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம், ஆனால் அவர் எப்போது 20 வயது நபரைப் போல் இருக்க முடியாது என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மழைக் காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று தொடர உள்ளது.

இதற்கிடையில், இந்த உலகக்கோப்பை தொடரில் டோனி மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானார். அவரது மெதுவான ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எனினும், பல வீரர்கள் டோனிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணிக்கு முதலாவது உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் கபில் தேவ், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது குறித்தும், டோனி மீதான விமர்சனம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத அணியாக உள்ளது. களத்தில் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் டோனி மீதான விமர்சனம் குறித்து கபில் தேவ் கூறுகையில், ‘டோனியை விமர்சிப்பது என்பது நியாமில்லாதது. பெரும்பாலான நேரங்களில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்களுக்கு இப்படி நடப்பது உண்டு. ஒன்றை மட்டும் மனதில் வைத்திருக்க வேண்டும். ஒருவர் எப்போதும் 20 வயதிலேயே இருக்க முடியாது.

ஒரு அணியாக பார்க்கும்போது டோனி சிறப்பாக தான் விளையாடுகிறார் என்பேன். ஒருவேளை அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். இதில் பிரச்சனை என்னவென்றால், நாம் நமது ஹீரோக்களிடமிருந்து கூடுதலாக எதிர்பார்க்கிறோம். ஆனால், அணிக்கு தேவையானதை அவர் சிறப்பாக செய்து வருகிறார்.

அவரது விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், மீண்டும் கூறுகிறேன். அவரால் தனது 20 வயதில் செயல்பட்டதைப் போன்று நிச்சயம் செயல்பட முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்