இவ்வளவு மோசமான பிட்ச்சா! இந்தியா-நியூசிலாந்து ஆடுகளத்தை விளாசிய முன்னாள் வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் நடக்கும் ஓல்டு டிராஃபோர்ட் ஆடுகளம் மிகவும் மோசமானது என்று முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. நேற்றைய தினம் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் போட்டி நடந்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அப்போது நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. ஆனால் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கும் சாதகமாக இல்லாமல், பந்துவீச்சுக்கும் சாதகமாக இல்லாமல் இருந்தது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். அதேபோல் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகள் ஸ்விங் ஆவதிலும் சிக்கல் இருந்தது.

இந்நிலையில், ஓல்டு டிராஃபோர்ட் ஆடுகளம் மோசமாக இருப்பதை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் கூறுகையில், ‘ஓல்டு டிராஃபோர்ட் ஆடுகளம் சிறந்தது என்று கூற முடியாது. மிகவும் மெதுவான ஆடுகளம்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு லேசாக ஒத்துழைக்கிறது. நியூசிலாந்து அணி 240 ஓட்டங்களுக்கு மேல் அடித்தால் தான் வெற்றி பெற முடியும்’ என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மார்க் பட்சர் கூறுகையில், ‘உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்தும் குப்பையாக இருக்கின்றன.

இரு அணிகளுக்கும் சமமாக இல்லாமல், இருவிதமாக பந்துவீசும்போது ஆடுகளம் மாறுபடுகிறது. 95 ஓவர்கள் மோசமாக இருந்து கடைசி 5 ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருப்பதற்கு பெயர் ஆடுகளம் அல்ல குப்பை’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மற்றொரு இங்கிலாந்து வீரர் கிரேம் ப்ளவர் கூறுகையில், ‘உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் நடக்கும் ஆடுகளம் இவ்வளவு மோசமானதாக இருப்பதா? பார்வையாளர்களும், ரசிகர்களும் ஏராளமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி போட்டியை காண வந்திருக்கிறார்கள். ஆடுகளத்தை இப்படி தரமற்றதாக அமைத்துள்ளது வேதனையாக இருக்கிறது. இது இங்கிலாந்துக்கு கவுரவ குறைச்சல்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ.சி.சி, வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.சி.சி நடத்தும் போட்டிகளில், ஆடுகளங்கள் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் தயாரிப்போம். இங்கிலாந்து சூழலுக்கு ஏற்றவகையில் தான் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டன. ஆடுகளங்கள் தயாரிப்பதில் எந்தவிதமான பாரபட்சமும் இல்லை’ என தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்