உலகக்கோப்பையில் இடமில்லை.. ஓய்வு அறிவிப்பு! அம்பத்தி ராயுடுவின் சாதனைகள் பற்றி தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் இதுவரை கடந்து வந்த பாதை குறித்து இங்கு காண்போம்.

கடந்த 2002ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு எதிரான U19 போட்டியில் 177 ஓட்டங்கள் விளாசி, இந்திய நாளிதழ்களில் விளையாட்டுப் பிரிவில் தலைப்புச் செய்தியானவர் அம்பத்தி ராயுடு.

அதனைத் தொடர்ந்து, ரஞ்சிக்கோப்பையில் ஆந்திராவுக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம், 2வது இன்னிங்சில் சதம் என மிரட்டியவர், 2004ஆம் ஆண்டு U19 உலகக்கோப்பையில் கேப்டனாக பொறுப்பேற்றார்.

அந்த தொடரில் இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்ற ராயுடு, ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பரவலாக பேசப்பட்டார். U19 தொடர் ஒன்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஒற்றை ஆளாக போராடி வெற்றி பெற வைத்தார்.

BCCL

அதன் பின்னர், ரஞ்சியில் மிகக் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசி அசத்தினார். ஆனால், 2004ஆம் ஆண்டு U19 உலகக்கோப்பையில் விளையாடிய ஷிகார் தவான், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஆர்.பி.சிங் ஆகியோருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்தபோதும், அம்பத்தி ராயுடுவுக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை.

இதற்கு காரணம் அவர் ஐ.சி.எல் தொடரில் ஆடியது என்று அப்போது கூறப்பட்டது. எனினும், 2010ஆம் ஆண்டில் ஐ.பி.எல்-யில் களம் கண்ட ராயுடு, தனது திறமையை நிரூபித்தார். மும்பை அணியில் தெரிவு செய்யப்பட்ட அவர், தனது முதல் போட்டியிலேயே 55 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.

அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். 2014-15 சீசனில் 27 போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 743 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனாலும், 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதன் பின்னர், ஜிம்பாப்வே தொடரில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் விளாசி தொடர் நாயகன் விருது பெற்றார். 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 603 ஓட்டங்கள் குவித்து வியக்க வைத்தார் ராயுடு.

ஆனால், யோ யோ உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததால், அவருக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் கிடைக்கவில்லை. எனினும், அடுத்த நாளே இந்தியா ஏ அணிக்காக களம் கண்டார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் 215 ஓட்டங்கள் விளாசினார்.

இந்நிலையில் தான் 2019 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவோம் என்ற நம்பிக்கையில் ராயுடு இருந்தார். அதற்காக ரஞ்சியில் விளையாடுவதைக் கூட தவிர்த்துவிட்டு, குறைந்த ஓவர் போட்டிகளிலேயே கவனம் செலுத்தினார். ஆனால், அவருக்கு பதிலாக உலகக்கோப்பை அணியில் விஜய் ஷங்கர் இடம்பெற்றார்.

அவரை தெரிவு செய்யாததற்கு காரணம், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 20 போட்டிகளில் ஆடி, அவற்றில் 9 போட்டிகளில் 25 ஓட்டங்களுக்கு குறைவான ஸ்கோர் எடுத்ததும், 2019 ஐ.பி.எல் தொடரில் ஜொலிக்காததும் தான்.

அத்துடன் அவரது பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததால், அவர் 10 மாதங்களுக்கு மேல் பந்துவீசாமல் இருந்தார். அவருடன் ஒப்பிடும்போது விஜய் ஷங்கர் சிறந்த வீரராக தெரிந்தார் என்று, இந்திய அணி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே விளக்கம் அளிக்கப்பட்டது.

K.R. Deepak

ஆனாலும், உலகக்கோப்பையில் ஷிகர் தவான் காயமடைந்தபோதும், விஜய் ஷங்கர் காயமடைந்த போதும் அம்பத்தி ராயுடு மாற்று வீரராக களமிறங்கும் தகுதியில் இருந்தார். ஆனால், பி.சி.சி.ஐ தவானுக்கு பதிலாக ரிஷாப் பண்ட்டையும், விஜய் ஷங்கருக்கு பதிலாக மயங்க அகர்வாலையும் தெரிவு செய்தது.

இதன் காரணமாக விரக்தியடைந்த அம்பத்தி ராயுடு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் அதற்கான காரணத்தை கூற மறுத்த அவர், ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறினார்.

அம்பத்தி ராயுடு 55 ஒருநாள் போட்டிகளில் 1,694 ஓட்டங்களும், 97 முதல்தர போட்டிகளில் 16 சதங்களுடன் 6,151 ஓட்டங்களும் குவித்துள்ளார். இதில் அதிகபட்சம் 210 ஆகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...