பந்துவீச்சிலேயே சதமடித்தவர் இவர்தான்.. மோசமான விமர்சனத்திற்கு குவியும் கண்டனம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை மோசமாக விமர்சித்த ஐஸ்லாந்து கிரிக்கெட் ட்வீட்டிற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கானின் பந்துவீச்சு சிதறடிக்கப்பட்டது. 9 ஓவர்கள் வீசிய ரஷீத் கான் 110 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த 2வது பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையில் இணைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக டி20 போட்டிகளில் கலக்கியதன் மூலம், இளம் வயதிலேயே அணித்தலைவராகவும் ரஷீத் கான் உயர்ந்தார்.

ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை. எனினும் ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஐஸ்லாந்து கிரிக்கெட் எனும் ட்விட்டர் பக்கத்தில் ரஷீத் கானை மோசமாக விமர்சித்து ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.

அதில், ‘ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் சதம் அடித்திருக்கிறார். அதுவும் 54 பந்துகளில் 110 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். உலகக் கோப்பையில் ஒரு பந்துவீச்சாளர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர். சிறப்பாக விளையாடினீர்கள் இளம் வீரரே’ என கூறப்பட்டுள்ளது.

இந்த ட்வீட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து வீரர் லூக் ரைட், ‘இது மோசமான பதிவு. இப்படிக் கலாய்ப்பதற்கு பதிலாக, அவர் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக மதிக்கத்தக்க ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆர்ச்சர், சோதி ஆகியோரும் தங்களது கண்டனங்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, ஐஸ்லாந்து கிரிக்கெட் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளது. அதில், ‘நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். லீவிஸ் 60 பந்துகளில் 113 ஓட்டங்கள் கொடுத்தார். பிராட் 6 பந்துகளில் 36 ஓட்டங்கள், ஸ்டோக்ஸ் 4 பந்துகளில் 24 ஓட்டங்கள் கொடுத்தார்.

எல்லோரும் அதைக் கிண்டல்தான் செய்தனர். நாங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் பார்க்கவில்லை. எனினும் இது மட்டும் சர்ச்சை ஆகிறது. அதனால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்