உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் தோல்வி! புலம்பும் முன்னாள் வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் இந்திய அணியுடன் தோல்வியடைந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர்கள் பலர் புலம்பி வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுடனான போட்டியில் இந்த முறையும் பாகிஸ்தான் தோல்வியுற்றது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். மேலும் பலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வாசிம் அக்ரம் (வேகப்பந்து வீச்சாளர்)

என்னைப் பொறுத்தவரையில் உலக்கோப்பை தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் அணி சரியாக இல்லை. உலகக்கோப்பை தொடருக்கு என்று எந்தவித திட்டத்தையும் பாகிஸ்தான் அணியிடம் என்னால் பார்க்க முடியவில்லை. வெற்றி அல்லது தோல்வி விளையாட்டின் ஒரு அங்கம். ஆனால், இதுபோன்ற வழியில் இருக்கக்கூடாது. போராடாமல் தோல்வியடையக் கூடாது.

முகமது யூசுப் (துடுப்பாட்ட வீரர்)

நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது அது எங்களுக்கு உயர் மதிப்புமிக்க போட்டியாக இருந்தது. நாங்கள் ஒருபோதும் தோற்க விரும்பியதில்லை. ஆனால், தற்போதைய ஆட்டத்தில் அணித்தலைவர் சர்பிராஸ் அகமது மற்றும் வீரர்களின் உடல் மொழியானது, நேர்மறை மற்றும் ஆற்றல் மிக்கதாக இல்லை.

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், விராட் கோஹ்லி நாணயச்சுழற்சியில் வென்று பீல்டிங்கை தெரிவு செய்து தவறு செய்தார். அதே தவறை தற்போது சர்பிராஸ் அகமது செய்துள்ளார்.

அப்துல் ரசாக் (ஆல்-ரவுண்டர்)

திட்டங்களை செயல்படுத்துவதற்கான திறன்கள் இல்லாத வீரர்கள் அணியில் இருந்தால் அவர்களை தூக்கி எறிய வேண்டும். இந்திய அணி விரைவிலேயே காயம் காரணமாக புவனேஷ்வர்குமாரை இழந்தது. ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் தங்களது பணி என்ன என்பதை அறிந்திருந்தால், புவனேஷ்வர் குமார் இல்லாததை உணரவில்லை.

மோஷின் கான் (துடுப்பாட்ட வீரர்)

இந்திய அணி எவ்வளவு வலிமையாக இருந்தது என்பது எல்லாம் பிரச்சனை இல்லை. உண்மை என்னவெனில் போட்டியில் நாம் வெல்ல முடியும் என்று தங்களை நம்புவதற்கான உந்துதல், ஆற்றல் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் இல்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்