ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தினாரா? சர்ச்சைக்கு அவுஸ்திரேலிய கேப்டனின் விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், அவுஸ்திரேலிய அணி வீரர் ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு, அணித்தலைவர் ஆரோன் பின்ச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 6 ஓவர்கள் வீசி 50 ஓட்டங்களை வாரி வழங்கினார். அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தாத நிலையில், அவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

குறிப்பாக, ஜம்பா பந்தை சேதப்படுத்தியிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது. ஒரு ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாக அவர் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் அடிக்கடி கையை விட்டு துழாவினார்.

பின்னர், ஏதோ ஒன்றை எடுத்து பந்து மீது அவர் வைப்பது போன்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. இச்சம்பவம் தான் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் சில வீரர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பின்ச் கூறுகையில், ‘ஆடம் ஜம்பா பேண்ட் பாக்கெட்டில் ஹேண்ட் வார்மர் என்ற பொருளை வைத்துக் கொண்டு, கைகளை சூடாக்கிவிட்டு பின்னர் பந்துவீசுவார்’ என தெரிவித்துள்ளார். எனினும், இந்த வீடியோ தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்