நானா இவ்வளவு ஓட்டங்கள் எடுத்தேன்? என்னால் நம்ப முடியவில்லை! அவுஸ்திரேலிய வீரரின் பேட்டி

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில், அவுஸ்திரேலிய வீரர் கொல்டர் நைல் அபாரமாக விளையாடி அரைசதம் விளாசியது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

இங்கிலாந்தில் 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 30ஆம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் தொடக்கத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் ஸ்மித் அணியை மீட்க போராடிக் கொண்டிருக்க, மறுமுனையில் கொல்டர் நைல் அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆடிக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் பொறுமை காட்டிய அவர், பின்னர் அதிரடியில் இறங்கி விஸ்வரூபம் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சை அடித்து நொறுக்கிய கொல்டர் நைல், 60 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அரைசதம் விளாசியது குறித்து கொல்டர் நைல் கூறுகையில், ‘நான் இவ்வளவு ஓட்டங்கள் எடுப்பேன் என நினைக்கவில்லை. நானா இத்தனை ஓட்டங்கள் எடுத்தேன்? பயிற்சி மேற்கொள்ளும்போது, ஸ்மித் 80 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆனால், நான் அதுகூட எடுக்கவில்லை. அதனால், சிறிதுநேரம் ஸ்மித்துடன் துணையாக நிற்கலாம் என நினைத்தேன். இரண்டாவது பந்தை நான் எதிர்கொண்டபோது மேலே சென்றது. நல்ல வேளையாக கேட்ச் ஆகவில்லை. இப்படியே சில பந்துகள் சென்றன. சில பந்துகள் எட்ஜில் பட்டு சென்றது.

அப்படியே எனது பேட்டிங் தொடர்ந்தது. நாங்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளோம். எங்கள் அணியில் இரண்டு உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். மிட்ஜெல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தது நல்ல முடிவு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்