அடித்து நொறுக்கிய ஸ்மித்! இங்கிலாந்தை பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலியா

Report Print Kabilan in கிரிக்கெட்

சவுதம்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

உலகக்கோப்பைக்கு முன்னதாக நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் பின்ச் 14 ஓட்டங்களில் அவுட் ஆக, டேவிட் வார்னர் 43 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் ஷான் மார்ஷ் 30 ஓட்டங்கள் எடுத்து பிளங்கெட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார். விக்கெட் கீப்பர் கேரி அதிரடியாக 14 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இதற்கிடையில் சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித், 102 பந்துகளில் 116 ஓட்டங்கள் விளாசி கடைசி ஓவரில் அவுட் ஆனார்.

அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லியாம் பிளங்கெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து களமிறங்கியது.

ஜேசன் ராய் 32 ஓட்டங்களிலும், பேர்ஸ்டோ(12), ஸ்டோக்ஸ்(20) ஆகியோர் சொற்ப ஓட்டங்களிலும் வெளியேறினர். எனினும் வின்ஸ்-பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 171 ஆக உயர்ந்தபோது பட்லர் 52 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து வின்ஸ்(64) அவுட் ஆன நிலையில், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 285 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வோக்ஸ் 40 ஓட்டங்கள் விளாசினார்.

அவுஸ்திரேலிய தரப்பில் பெஹெண்டிராப், ரிச்சர்டுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers