ஹாட்ரிக் எடுத்ததே தெரியாது.. பள்ளிக்கு பின் இப்போதுதான் தொடக்க வீரராக களமிறங்கினேன்! சாம் குர்ரான் உருக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்திய சாம் குர்ரான், பள்ளியில் விளையாடியதற்கு பின்னர் தற்போது தான் தொடக்க வீரராக களமிறங்கியதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் சாம் குர்ரான், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். ஆனால், அவருக்கு ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததே தெரியவில்லை.

துடுப்பாட்டத்திலும் குர்ரான் கலக்கினார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர், 10 பந்துகளில் 20 ஓட்டங்கள் விளாசினார். இந்நிலையில், பள்ளி கிரிக்கெட்டில் ஆடியதற்கு பிறகு தற்போது தான் தொடக்க வீரராக களமிறங்கியதாக சாம் குர்ரான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் ஹாட்ரிக் எடுத்ததே எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் சப்தம் போட்டதால் எனக்கு என் சிந்தனையே கூட காதில் விழவில்லை.

அஸ்வின் என்ன சொன்னாரோ அதை செய்தேன். உள்ளூர் துடுப்பாட்ட வீரர்கள் எப்படி ஆடுவார்கள், எங்கு அடிப்பார்கள் என்று எனக்குத் தெரியாது, நான் மற்றவர்களிடம் தான் கேட்டறிந்தேன்.

ஆனால் ஷமி இரண்டு அபாரமான ஓவர்களை வீசினார். அஸ்வினின் அந்த ரன்-அவுட் தொடர்ந்து வெற்றி பெறுவோம் என்று கருதுகிறேன். நான் இங்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்பினேன்.

அதிர்ஷ்டவசமாக 150 ஓட்டங்களுக்கும் மேல் எடுத்து விட்டோம். நான் இதற்கு முன்பாக பள்ளி கிரிக்கெட்டில் தான் இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறேன். மூத்தோர் கிரிக்கெட்டில் இதுவே முதல் முறை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்