ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: சென்னை அணி த்ரில் வெற்றி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் இடையே இன்று நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்கத்திலேயே அமபத்தி ராயுடு 1 (8) வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து வாட்சன் 13 (13) வெளியேற, பின்னர் வந்த கேதர் ஜாதவ் 8 ஓட்டங்களிலேயே நடையை கட்டினார்.

இதனால் 27 ஓட்டங்களில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி தடுமாறியது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் அணித்தலைவர் டோனி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

36 (32) ஓட்டங்களில் ரெய்னா வெளியேற, அதன்பின்னர் வந்த பிரவோ அதிரடியை வெளிப்படுத்தினார். இதற்கிடையே டோனி அரை சதம் அடித்து அரங்கத்தை அதிரச் செய்தார்.

பின்னர் 27 (16) ஓட்டங்களில் பிரவோ விக்கெட்டை இழந்தார். ஆனால் இறுதி வரை அவுட் ஆகாமல் விளையாடி டோனி, கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் குவித்தது. டோனி 46 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவித்தார். ஜடேஜா 3 பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட 8 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் ராயல் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ஜெர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் அணித்தலைவர் ரஹானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அதில் ரஹானே (0) கணக்கை துவங்காமலே வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 8(10), பட்லர் 6(7), அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 39(24), ஓரளவு நிலைத்து ஆடிய ஸ்டிவன் ஸ்மித் 28(30), கெளதம் 9(7) ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் அதிரடியாக ரன் சேர்த்த பென் ஸ்டோக்ஸ் 46(26) ஓட்டங்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய கோபால் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஆர்சர் 24 (11), உனத்கட் (0) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தாகூர், தாஹிர், சாஹர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றிபெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்