கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள்.. நினைத்த மாதிரி அமையாமலும் போகும்: இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா

Report Print Kabilan in கிரிக்கெட்

சில நாட்களில் இறுதி கட்ட பந்துவீச்சு நாம் நினைத்த மாதிரி அமையாமலும் போகும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்னத்தில் நடந்த பரபரப்பான முதல் டி20 போட்டியில், அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

கடைசி இரண்டு ஓவர்களில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய பும்ரா 2 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த நிலையில், உமேஷ் யாதவின் அடுத்த ஓவரில் 14 ஓட்டங்களை விளாசி அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இதனால் உமேஷ் யாதவின் கடைசி ஓவர் பந்துவீச்சு குறித்து பலரும் கடும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தோல்வி குறித்து பேட்டியளித்துள்ளார்.

AFP

அவர் கூறுகையில், ‘கடைசி ஓவரில் இதுபோல் நடக்க தான் செய்யும். எந்தவொரு சூழ்நிலையிலும் கடைசி கட்ட பந்து வீச்சு எப்பொழுதும் கடினமானது தான். இறுதிகட்ட பந்து வீச்சு இரண்டு வகையாகவும் போகும்.

உங்களது பந்துவீச்சில் சிறப்பாக முயற்சித்தாலும், தெளிவான திட்டத்துடன் பந்து வீசினாலும் சில நாட்களில் நமக்கு பலன் கிடைக்கும். சில நாட்களில் நினைத்த மாதிரியான பலன் கிடைக்காமலும் போகக்கூடும். எனவே அது பற்றி கவலைப்படக்கூடாது.

நெருக்கமான போட்டி நிலவிய இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க முயற்சித்தோம். ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை. இதுபோன்ற ஆடுகளத்தில் சேஸிங் செய்வது கடினமானதாகும். 15 முதல் 20 ஓட்டங்கள் நாங்கள் குறைவாக எடுத்தாலும், போட்டி அளிக்கக்கூடிய ஸ்கோரை எட்டினோம்.

நாங்கள் நினைத்தை விட இரண்டு, மூன்று விக்கெட்டுகளை கூடுதலாக இழந்துவிட்டோம். இந்த ஆடுகளத்தில் அதிக ஸ்கோர் எடுப்பது என்பது கடினமானதாகும். நாங்கள் எல்லா வகையிலும் சிறப்பான முயற்சி எடுத்தோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்