அன்று லாரா... இன்று குசல் பெரேரா: திகைப்பூட்டும் சதமும் வெற்றியும்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டர்பன் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, 235 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டிகாக் 80 ஓட்டங்கள் சேர்த்தார்.

இலங்கை அணி தரப்பில் விஸ்வா பெர்ணாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக குஷால் பெரேரா, 51 ஓட்டங்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

43 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 259 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அணித்தலைவர் டூப்ளசிஸ் 90 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பெர்ணாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 304 ஓட்டங்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ஒஷாடா பெர்னாண்டோ 28 ஓட்டங்களுடனும் குஷால் பெரேரா 12 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். முந்தைய நாள் ஸ்கோருடன் நான்காம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது.

4வது விக்கெட்டுக்கு பெர்னாண்டோ -பெரேரா இணை 58 ஓட்டங்கள் சேர்ந்த நிலையில் பெர்னாண்டோ 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த விக்கெட் கீப்பர் டிக்வல்லா, தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் கணக்கைத் தொடங்காமலேயே வெளியேறினார்.

இதனால், இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில், 6வது விக்கெட்டுக்கு குஷால் பெரேராவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செய டிசெல்வா, அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 96 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், டிசெல்வா 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த சுரங்கா லக்மல், அம்புல்டெனியா மற்றும் ரஜிதா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட் இழந்து தடுமாறியது.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஷால் பெரேரா, 146 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

கடைசி விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு 78 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோவுடன் கைகோத்த குஷால் பெரேரா, இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

இந்த ஜோடியைப் பிரிக்க தென்னாப்பிரிக்க வீரர்கள் எடுத்த முயற்சி இறுதிவரை பலிக்கவே இல்லை.

85.3 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை இலங்கை அணி எட்டியது.

குஷால் பெரேரா, ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக களத்தில் நின்ற விஸ்வா பெர்னாண்டோ 27 பந்துகளைச் சந்தித்து 6 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை வெற்றிகரமான சேஸிங்கில் கடைசி விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இலங்கை அணியை வெற்றிபெற வைத்த குஷால் பெரேரா, ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தன் சொந்தமண்ணில் பிரையன் லாரா 153 நாட் அவுட் என்று ஓட்டங்கள் எடுத்து 300 ஓட்டங்களுக்கும் மேலான இலக்கை விரட்டி அபாரமான டெஸ்ட் வெற்றியை மே.இ.தீவுகளுக்கு பெற்றுத் தந்ததைப் போல்

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 153 நாட் அவுட் என்று ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்றுப் புகழ்பெற்ற வெற்றியை இலங்கைக்கு தேடித்தந்தார் குசல் பெரேரா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers