அந்த விடயம் மிகப்பெரிய வியப்பாக இருந்தது! தமிழக வீரர் விஜய் ஷங்கர் நெகிழ்ச்சி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்னை 3வது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்ய கூறியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என விஜய் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கர், மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பின்னர் நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய விஜய் ஷங்கர், டி20 தொடரிலும் களமிறங்கினார்.

குறிப்பாக கடைசி டி20 போட்டியில் 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர், 28 பந்துகளில் 43 ஓட்டங்கள் குவித்து அனைவரையும் அசர வைத்தார். இந்நிலையில், 3வது இடத்தில் களமிறங்கியது குறித்து விஜய் ஷங்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அணி நிர்வாகம் என்னை 3வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யுங்கள் என்று கூறியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விளையாடுவதில் கவனம் செலுத்தினேன்.

இந்தியா போன்ற அணிக்காக விளையாடும்போது, எல்லா விதங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும். அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர் முழுவதில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன்.

நான் அதிக அளவில் பந்து வீசவில்லை. ஆனால், வித்தியாசமான சூழ்நிலையில் பந்து வீச கற்றுக் கொண்டேன். விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, டோனி எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்தேன். அதில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் கடைசி போட்டி கூட கற்றுக் கொள்வதற்கான அனுபவம்தான். இன்னொரு பவுண்டரியை விட ஒன்று அல்லது இரண்டு ஓட்டங்களுக்கு முயற்சி செய்திருக்கணும். நான் எப்போதும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்று தான் விரும்புவேன்.

அணிக்காக என்னால் வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்றால், தானாகவே அது என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை வளர்க்கும். என்னைப் பொறுத்தவரைக்கும், முக்கியமான விடயம், வித்தியாசமான சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறி தொடர்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers