ஆட்டத்தின் போக்கை மாற்றிய மோசமான தீர்ப்பு.. முன்னாள் இந்திய வீரர்கள் கடும் கண்டனம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலுக்கு தவறான அவுட் கொடுக்கப்பட்டதற்கு, இந்திய முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலுக்கு பந்து வீசிய குருணால் பாண்ட்யா, நடுவரிடம் எல்.பி.டபிள்யூ அவுட் கோரினார்.

அதற்கு நடுவர் உடனே அவுட் என்று அறிவித்தார். ஆனால், மிட்செல் இது குறித்து கேப்டன் வில்லியம்சனிடம் ஆலோசித்து விட்டு டி.ஆர்.எஸ்.ரிவியூ கேட்டார். ஏனெனில் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டது என அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ரிவியூ பார்க்கப்பட்டபோது ஹாட்ஸ்பாட்டில், மட்டையின் உள்விளிம்பில் பந்து பட்டதற்கான மிகப்பெரிய வெள்ளைப் புள்ளி தெரிந்தது. ஆனால், ஸ்னிக்கோ மீற்றரில் பந்து மட்டையைக் கடக்கும்போது ஒன்றும் தெரியவில்லை.

பின்னர், 3வது நடுவர் ஸ்னிக்கோ மீற்றரை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவுட் என்று கூறினார். இது மிட்செலுக்கும், வில்லியம்சனுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் நடுவரின் தீர்ப்புக்கு மதிப்பளித்து மிட்செல் வெளியேறினார்.

இந்நிலையில், தவறாக கொடுக்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு முன்னாள் இந்திய வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இதுகுறித்து கூறுகையில், ‘இன்னும் மோசம், இந்த மோசமான தீர்ப்பை அடுத்து நியூசிலாந்து அணி ரிவியூவையும் இழந்தது.

படுமோசம், நாம் சீரியஸாகத்தான் இருக்கிறோமா? டி.ஆர்.எஸ்-ஐ தோல்வியடையச் செய்து விட்டார் மூன்றாவது நடுவர்’ என தெரிவித்துள்ளார். ஹர்ஷா போக்ளே தன் ட்விட்டரில் கூறுகையில்,

‘டி.ஆர்.எஸ் விடயம் 3வது நடுவரால் குழப்பப்பட்ட பிறகே, பேட்ஸ்மேனை மைதானத்திலிருந்து போகுமாறு கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 3வது நடுவர் ஹாட்ஸ்பாட்டை விடுத்து ஸ்னிக்கோ மீற்றருக்கு முன்னுரிமை அளித்தார். இப்படி நாம் கேள்விப்பட்டதில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் டெப் நந்தி என்பவர் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நியாயமான போட்டியை விரும்புகின்றனர். நியாயம் வழங்குங்கள்’ என தெரிவித்துள்ளார். இந்த தவறான தீர்ப்பு ஆட்டத்தின் முடிவை மாற்றியதாக கருதப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers