கடைசி வரை போராடிய டோனி.. நியூசிலாந்திடம் மரண அடி வாங்கிய இந்திய அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

வெலிங்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டிம் செய்ஃபெர்ட், காலின் முன்ரோ இருவரும் இந்தியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். முன்ரோ 20 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சனும் அதிரடி காட்டினார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தியது. அணியின் ஸ்கோர் 134 ஆக உயர்ந்தபோது செய்ஃபெர்ட் 43 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

Getty

இதில் 6 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் வந்த வீரர்களும் தங்களது பங்குக்கு அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்கள் குவித்தது.

கேப்டன் வில்லியம்சன் 22 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு ரன்னில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், தவான் மற்றும் விஜய் சங்கர் அதிரடியாக விளையாடினர். தவான் 18 பந்துகளில் 29 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட்(4), விஜய் சங்கர்(27) அடுத்தடுத்து சாண்ட்னரின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். பின்னர் வந்த டோனி அணியை மீட்க போராடினார். ஆனால், மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

குருனல் பாண்ட்யா(20) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி வரை போராடிய டோனி 39 ஓட்டங்களில் 9வது விக்கெட்டாக அவுட் ஆனார்.

இதன்மூலம் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சவுதி 3 விக்கெட்டுகளையும், பெர்குசன், சாண்ட்னர், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers